Thursday, February 24, 2011

எனக்கு என்ன வேணும்??????????? - Short story


"சார்,
யார் சார் நீங்க? என்ன வேணும்? "
வெள்ளை அடித்துக்கொண்டிருந்த அந்த மதில் சுவரை வெறித்து பார்த்து கொண்டிருந்த என் காதுகளில் சத்தமாய் கேட்டது. ”எதற்கு இந்த கத்தல்?ஒருவேளை ரொம்ப நேரமாய் கேட்டு கொண்டிருப்பாரோ? ”
அப்படி கேட்டது அந்த சுவரில் வெள்ளை அடித்து கொண்டிருந்தவர்.

நான் வேலை மாற்றல் ஆகி இந்த நகரத்துக்கு வந்தது ஓர் ஆண்டு முன்பு, எனது நிறுவனம் எனக்கு பதவி உயர்வு கொடுத்து இந்த நகரத்திற்கு அனுப்பியது. வேலைதான் எனது காதலி மனைவி என்று வாழ்பவன் நான். நேரம் தவறாமை, எந்த செயலையும் நேர்த்தியாக செய்யும் திறன், எவ்வளவு நேரம் ஆனாலும் வேலையை முடிக்காமல் தூங்க முடியாத சினிசியாரிட்டி -இவையே என் அடையாளங்கள்
. இந்த பரபரப்பான நகர வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது, எவ்வளவு vibrant ..எவ்வளவு movement. மனிதன் என்பவன் இவ்வளவு சுறுசுறுப்பாய் இருப்பதுதான் நாட்டிக்கும் வீட்டிற்கும் நல்லது என்று எப்பொதும் நினைத்துக்கொள்வேன்.

தினம் நான் எனது கம்பெனி வாகனத்திற்காக இந்த இடத்தில்தான் நிற்பது வழக்கம். நான் தங்கிருக்கும் அடுக்குமாடி குடிருப்பு இங்கு இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம். நடந்துதான் வருவேன், ஒரு நாள் வழக்கம்போல இங்கு வாகனத்திற்காக காத்து கொண்டு இருந்தேன் அப்போதுதான் என் கண்ணில்பட்டது அந்த மதில் சுவர், வெள்ளை அடித்து கொண்டிருந்தார்கள். வெள்ளை அடித்து கொண்டிருந்தவரிடம் ஜீன்ஸ் டி ஷர்ட் அணிந்த ஒரு பெண் பேசிகொண்டிருந்தாள், அவள் முகத்தை பார்க்க முயற்சிக்கும்போது அந்த சாலையின் இருபக்கத்திலும் சிக்னலுக்காக வரிசையாக வாகனங்கள் நின்றுவிட்டன. எவ்வளவு புதிய வாகனகங்கள் இப்போது சாலையில். Toyota, Scoda, Benze என்று, இதுபோக ஆட்டோகள், இருசக்கரம். இந்த சிக்னலில் எப்போதும் இப்படித்தான் பிஸியாக இருக்கும்.

எந்தனையோ முறை இந்த இடத்தில நின்று இருக்கிறேன் அதுஎப்படி இன்று அந்த சுவரை கவனித்தேன்? என்று யோசித்துக்கொண்டு கம்பெனி வாகனத்தில் ஏறி அலுவலகத்திற்கு வந்து கம்பூட்டர் லாகின் பண்ணி, மெயில் பார்த்தேன் , வேலைக்கு வரும்முன்பே வீட்டிலிருந்து மெயில் பார்த்துவிட்டுத்தான் கிளம்புவேன் எனவே ஒரு புதிய மெயில்தான் இருந்தது அதுவும் எனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் ராஜினாமா கடிதம், நான்தான் அந்த பெண்ணின் அதிகாரி என்பதால் எனக்கு அனுப்பிருந்தாள். கவனமாய் வாசித்தேன் வாசிக்கும்போது காரணம் இல்லாமல் காலையில் கவனித்த அந்த சுவரும் அதன் பக்கத்தில் பார்த்த அந்த பெண்ணும் நினைவுக்குவந்தன.

அடுத்தநாள் வழக்கமான இடத்தில நின்று கொண்டிருந்தேன், அதே நெரிசல் கூட்டம் ,வாகன வரிசைகள், புழுதியாய் காற்று, இன்று பல மண் லாரிகள் வரிசையாய் எதிர் சாலையில் நின்றுகொண்டிருந்தன, அப்படி இப்படி வாகனம் மெதுவாய் செல்ல ஆரம்பித்தன. அப்போதுதான் நான் நிற்கும் சாலையின் எதிர் புறத்தில் உள்ள அந்த சுவர் நன்றாய் வெள்ளை அடித்து இருந்தார்கள், ஆனாலும் அங்கு இன்னும் சிலர் அந்த சுவரில் கோடு போட்டுக்கொண்டிருந்தார்கள். உன்னிப்பாய் கவனிக்க முடியவில்லை மீண்டும் சிக்னல் நெரிசல் அந்த சுவரை மறைத்தது.

காலையில் அலுவலகம் கிளம்பும் முன்பு ஈமெயில் பார்த்து விட்டுத்தான் கிளம்புவேன். எல்லா ரிப்போர்ட்களையும் வாசித்துவிட்டு அலுவலகத்தின் எந்த பணி யாருக்கு கொடுக்கலாம், யாரோடு மீட்டிங், எந்த வேலை முக்கியம் என்று எனது மனதுக்குள் திட்டம் தயாராய் இருக்கும் . வாசித்த ஈமெயில் ஒன்று எனது மேனேஜர் அனுப்பியது அந்த மெயிலுக்கான பதிலை இன்று அனுப்பவேண்டுமாம். நான் வாகனத்திற்காக நிற்கும் இடத்தில இருந்து சுமார் 10 போன் செய்து எனக்கு தேவையான எல்லா செய்தியையும் உறுதி செய்துகொண்டேன். மேனேஜர் மெயிலுக்கு பதில் தயார். வாகனத்தில் ஏறும்போதுதான் அந்த எதிர்புற சுவரை கவனித்தேன், அதில் ஏதோ எழுதியிருந்தது.

அந்த சுவரில் என்ன எழுதியிருந்தது என்பதை பற்றி அறிய அப்படி ஒன்றும் அவா இல்லை என்றாலும், அந்த இடத்தில நிற்கும் போது ஓர் ஆசை வரும். . பெரும்பாலும் இப்படி பட்ட ஆசைகள் எனது நேரத்தையும் கவனத்தையும் வீணாக்கும் என்று நம்புவன் நான். நான் நிற்கும் இடத்திற்கும் அந்த சுவருக்கும் இடையில் இருவழி சாலை. அந்த இரு சாலைக்கு மத்தியில் ஒரு divider இருக்கிறது. கொஞ்சம் சிரத்தை எடுத்தால் ஒழிய அந்த வாசகத்தை வாசிக்க முடியாது என தோன்றியது. அப்படி நான் சிரத்தை எடுத்தாலும் அந்த வாசகத்தை வாகன நெரிசல் மறைத்துவிடும், இல்லையென்றால் நான் போன் செய்துகொண்டிருப்பேன் நான் அதை வாசிக்க மறந்துவிடுவேன்.

இப்போது வந்துள்ள புதிய மேனேஜர் என்னை போல அவர் விட்டிலிருந்து கிளம்பும் போதே எனக்கு 5 போன் செய்துவிடுவார். நானும் மேனேஜர் ஆனால் இவரை போலத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து கொள்வேன்.

நான் நிற்கும் சாலை இன்று அதிகமாய் கூட்டம் இருந்தது, வாகனங்களில் கட்சி கொடி பறந்தன, மீண்டும் அந்த சுவர் மீது எழுதிய வாசகத்தை படிக்கமுடியவில்லை. இந்த சுவர் இப்போது அடிக்கடி நினைவுக்கு வருகிறது, காரணம் இல்லாமல் ஒரு நாள் நான் 7 Habits Of Effective People என்ற புத்தகத்தை பற்றி எனது Team Membersக்கு ஒரு training Presentation கொடுக்கும்போது இந்த சுவர் அதில் ஏதோ எழுதிருப்பது போல என் நினைவுக்கு வந்தது. தினம் அந்த இடத்தில வந்து நின்றாலும் என்னால் அந்த சுவரை அதில் எழுதிருப்பதை வாசிக்க முடியவில்லை. வாசிக்க எத்தனை தடை!! மாணவர்கள் ஊர்வலம், கட்சி ஊர்வலம், பாடை ஊர்வலம், இந்த சிக்னல் வாகன நெரிசல், புழுதி காற்று, வாகன சத்தம், மண் லாரிகள், ஆட்டோகள் என்று பல பல. இதனை தடங்கலுக்கு மத்தியிலும் அந்த வாசகத்தை எப்படி வாசிப்பது? இல்லை வாசிப்பது என்பது அவசியம்தானா? ஏன் அந்த சுவர் அடிக்கடி நினைவுக்கு வருகிறது. கொஞ்ச நாளாய் அந்த சுவர் கனவிலும் வருகிறது.

எப்படியாவது வாசித்து விடவேண்டும் என்று வந்து நிற்பேன், எனது ரோல் மாடல் மேனேஜர் போன் செய்வார் அவரிடம் பணியை பற்றி உரையாடும்போது எவ்வளவு அனுபவம் எனக்கு கிடைகிறது, நான் மேனேஜர் ஆவதற்கு என்ன திறமை தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று எனக்கு புரியவைக்கிறார். இப்படியும் ஒரு மா மனிதனா என்று வியந்திருக்கிறேன்.
அப்போது நான் மிக தீவிரமாய் ஒரு ப்ரொஜெக்டில் ஒரு தீவிரவாதி போல இயங்கி கொண்டு இருந்தேன் அவ்வப்போது வயிற்றில் வரும் வலியை பொருட்படுத்தாமல். வயிற்றில் வலி வரும்போது அந்த சுவரும் நினைவுக்கு வரும் , அதில் உள்ள வாசகத்தை வாசித்துவிடலாம் என்று வந்து நிற்பேன், அதை விடவும் முக்கியமான போன் கால் வரும் அல்லது வாகன வரிசை மறைத்துவிடும்.

எபபடி நாட்கள் போனது என்று தெரியவில்லை ஆனால் என் வயிற்றில் வலி, அந்த சுவர் நினைவு கொஞ்சம் அடிக்கடி வருவதுபோல இருந்தது. எனது வலியை பற்றி டாக்டரிடம் ஆலோசனை கேட்க அந்த சாலையை கடந்தேன், நான் வழக்கமாய் காத்திருக்கும் இடத்திற்கு எதிர்ப்புறம்தான் அந்த ஆஸ்பத்திரி இருக்கிறது. இன்று எப்படியும் அந்த சுவர் வாசகத்தை வாசித்து விடலாம் என்று நினைத்து. ஆபீசிக்கு லீவ் சொலிவிட்டு அந்த சாலையை கடந்தேன் , முதல்முறையாக.

வாகன நெரிசல் கடந்து மக்கள் கூட்டம் கடந்து சாலையின் மத்தியில் உள்ள தடுப்பு சுவர் கடந்து அந்த சுவரின் அருகில் வந்தேன் அந்த வாசகத்தின் மீது வெள்ளை அடித்து கொண்டிருந்தார்கள்.

வெள்ளை அடிக்கப்பட்ட அந்த சுவர், படிக்க மறந்த அந்த வாசகம்,மறந்து போன நண்பனின் பிறந்தநாள், மறந்து போன அப்பா அம்மாவின் திருமண நாள்,பெயர் மறந்து போன என் ஆபீசை பெருக்கும் அந்த பெண் , மறந்து போன சிரிப்போடு இருக்கும் எனது சிறுவயது போட்டோ, வாசிக்க மறந்து போன கவிதை, நலம் விசாரிக்க மறந்து போன எனது LKG டீச்சர், படிக்க மறந்து போன புத்தகங்கள், சொல்ல மறந்த காதல். மேனேஜர், ஈமெயில், டி ஷர்ட் ஜீன்ஸ் பெண், ராஜினாமா பெண், 7 Habits, போன், மறந்து போன.........,மறந்து போன........,மறந்து போன .......,மறந்து போன........... என்று உறைந்து இருந்த என்னை நினைவுக்கு கொண்டுவந்தார் அந்த ஆள். "சார், யார் சார் நீங்க. என்ன வேணும்? "

”ம்ம்ம்ம்ம்ம் அதுவந்து ஒன்னும் இல்லை என்று அந்த இடத்தை விட்டு நகர்தேன் ”
எனக்கு........................ என்ன............................. வேணும்???????????

2 comments:

  1. self realizing story, it reminds us to remember present as we live in a non existing state of imagination which we ourself call present.

    ReplyDelete
  2. //self realizing story, it reminds us to remember present as we live in a non existing state of imagination which we ourself call present.//

    thank you srinivasan for your visit

    ReplyDelete