Saturday, July 8, 2017

அலார்ட்டா இருக்கனும்ங்க..

அலார்ட்டா இருக்கனும்ங்க..
1 இணையத்தில் வரும் செய்திகள் உங்கள் உணர்வை உலுக்கும் செய்தியாக இருந்தால் அந்த செய்தியின் நம்பிக்கைத் தன்மையை ஆராயாமல் உணர்ச்சி வசப்படாதீர்கள். 90% அது போலியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. செய்திகளிலும் போலி உண்டு .
2. முடிந்தவரை உணர்வு கொப்பளிக்கும் காட்சிகள், வீடியோக்கள், பேச்சுகளை அடுத்தவர்களுக்கு ஃபார்வர்ட் செய்யாதீர்கள். அடுத்தவர்களுக்கு அனுப்பும் பொழுது நல்லதா அனுப்பினா நல்லதுதானே. சுகி சிவம், ஹீலர் பாஸ்கர், அப்துல் கலாம், போன்றவர்களின் வீடியோ செய்திகளை ஃபார்வர்ட் செய்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதீக பார்வேர்ட் அதீத தீமை.
3. முக நூலிலும் வாட்ஸப்பிலும் தொடர்ந்து யாரையாவது அல்லது ஒரு குழுவினரை தாக்கி எழுதும் நபர்களை விலக்கி வையுங்கள். அவர் உங்க நண்பராக இருந்தால் தள்ளி நில்லுங்கள். அவரிடம் ஏதோ நோய் கிருமி உள்ளது என்கிற அபாய ஒலி மண்டையில் ஒலிப்பதை அசட்டை செய்யாதீர்கள். அவர் எழுதுவது உங்களுக்கு ஆதரவாக இருந்தால் கூட ஒற்றை கோணத்தில் எழுதும் நபர்களை புறக்கணியுங்கள். அது மூளையில் ஒரே ஒரு பகுதி தவிர வேறு பகுதிகள் வேலை செய்யாமல் செயலிழந்த நிலை !! அது ஒருவித நோய். அச்சோ, பாவம் என கடந்து விடுங்கள். இல்லையென்றால் அது வெகு சீக்கிரத்தில் உங்களுக்கும் பரவக் கூடும். நோய்கள் இணையத்தின் மூலமும் பரவும்ங்க.
4. யார் எதை செய்தியாகவோ கருத்தாகவோ முகநூலில் சொன்னால் அதை உண்மை என நம்பாதீர்கள் அது அந்த நபரின் கருத்து அவ்வளவுதான். யாராலும் உண்மையை சொல்லிவிட முடியாது. மேலும் உண்மையை உங்களுக்கு சொல்லும் அளவுக்கு பரந்த மனம் கொண்டவர்கள் யாரும் இல்லை. சொல்லும் கருத்திற்கு ஆதரவு கிடைக்கிறதா, அது வரவேற்கப் படுகிறதா என்பதே நோக்கம் - உண்மை அல்ல. சும்மா கிசு கிசு அவ்வளவுதான்.
5. அடுத்து இந்த தேசம் நாசமாக போகிறது, நம் வாழ்வே முடிய போகிறது, இந்த உலகம் அழிய போகிறது. நம் மதம் ஒடுக்கப்படுகிறது போன்ற வக்கிர சீற்றங்களை காமெடியா பாருங்க.
 இப்படி சொல்வது எழுத்து முறையின் ஒரு டெக்னிக்..ஏனென்றால் உண்மை செய்திகளை உணர்வு பூர்வமாக சொல்ல அலங்காரச் சொற்கள் தமிழ் மொழியில் அவசியமில்லை. மிக அமைதியாக சொல்லியே உண்மை பறிமாறப்படும். ஓவர் அலங்காரம் பயங்கரவாதம்.
6. அடுத்து நீங்கள் செய்யப் போகும் காரியம் உங்கள் ஃபோனில் வந்த வாட்ஸாப் செய்தியை வைத்தோ முக நூல் பதிவை வைத்தோ முடிவு செய்யாதீர்கள் - அது உலகிலே மிக நல்ல விஷயமாக இருந்தால் கூட அதை பின்பற்றாதீர்கள். நல்லது செய்ய கண் முன் நடக்கும் விஷயம் போதும். இணையத்தில் பார்த்து ஓவர் நன்மை செய்தலும் கேடே!
7. சோஷியல் இன்ஜினியரிங் என ஒன்று இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் சிந்தனைகளை செயல்களை சில பல செய்திகள் மூலம் நிர்ணியக்க முடிகிற பொறியியல் அது. மனிதன் ரொம்ப பலவீனமானவன் என்கிற உண்மை அடிப்படையில் உருவாக்கப்பட்ட பொறியியல் அது. உங்களின் புலன்களை வெகு எளிதாக ஏமாற்றி உங்கள் மண்டைக்குள் நம்பிக்கையாக கான்சர் செல் போல பரவச் செய்யும் செயல் அது. புள்ளி விபர புள்ளி ராஜாக்களிடம் ஜாக்கிரதை!!
இதை யார் வேண்டுமென்றாலும் இணையத்தில் செய்ய முடியும் என்பது முக்கியம்.
8. முக நூலில் அவர் நல்லா காட்டமா எழுதுவாப்ல, முகத்திரையை கிழித்து எழுதுவாப்ல, சமுக நீதிக்கு போர் குரல் கொடுப்பாப்ல போன்றவர்கள் டைம்பாமிற்கு ஒப்பானவர்கள். இவர்கள் போதை போல உங்களுக்கு தேவையானதை தந்து கொண்டிருக்கிறார்கள்... எட்ட நின்று ரசித்து கடந்து போங்கள். இவர்கள் டாஸ்மாக் பார் போன்றவர்கள். போதை நிச்சயம்.. அதே சமயம் அழிவும்தான் !!
9. உலகம் முழுவதும் இணையத்தில் உலவும் fake news போலி செய்திகள் பிரச்சனையாக இருக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். எழுதும் திறமையும், உணர்வை தூண்டும் வசனங்களை எழுதும் திறமையும், இயல்பாக பொய் சொல்லும் திறனையும், கொண்டவர்களை வைத்து மிகப் பெரிய ஊடகமாக இணையம் இயங்கி வருகிறது என புரிந்து கொள்ளுங்கள். போலி செய்திகள் சிலர்களின் விருப்பத்திற்கு தயாரிக்கப்படுகிறது.
10. உங்கள் உற்ற நண்பர்கள் இணைய செய்தி பகிர்ந்தால் கூட அந்த செய்தியின் நம்பகத்தன்மையை சோதித்து பாருங்கள் முடிந்தால் நம்புங்கள். அல்லது நண்பருக்கு வருத்தம் வருமென்றால் நீங்களும் போலியாக நம்பியது போல வாவ் எனச் சொல்லி நழுவி விடுங்கள். பல செய்திகள் நீங்கள் நம்ப வேண்டுமென்றே எழுதப்படுகிறது . சும்மா தெரிஞ்சிக்கிடுங்க அவ்வளவுதான்.
கடைசியா ஒன்னு - இணைய மொண்ணைகளே நீங்கள் எழுதுவதால் என்ன பயன். இந்த சமூக நலனுக்கு எழுதலியே எனறால்
 கீ கீ கீ என கடந்து விடுங்கள்.. 
இணையத்தில்
மொண்ணை நல்லது.
மொக்கை வரம்-- இதை மட்டும் நம்புங்கள்.

Tuesday, June 27, 2017

மாடு வளர்ப்பு இயற்கை மீதான வன்முறை:

மாடு வளர்ப்பு இயற்கை மீதான வன்முறை:
கடந்த பத்து இருபது வருடங்களாய் அறிவியலாளர்கள் வெளியே தைரியமாக சொல்ல முடியாத ஒரு உண்மை இது. பெரும் ஊடகங்கள் மக்கள் குழம்பி விடக்கூடாதென சொல்லாமல் இருக்கும் செய்தி இது. திரைமறைவில் வல்லுனர்கள் மண்டையை பிராண்டிக் கொண்டிருக்கும் சிக்கல் இது.
"கால்நடை வளர்ப்பு, அதிலும் மாடுகள் வளர்ப்பதால் பூமி வெப்பமாகிறது" என்பதுதான் அது.
என்ன பாஸு எப்படி இது என்றால் - மாடுகள் புல் இலை தழைகளைத் தின்று மாமிசமாகவும் பாலாகவும் மாற்றும் அந்த செயலின் பக்க விளைவுகளாக பூமி வெப்பத்தை அதிகரிக்க செய்யும் கரிம வாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைட் வாயுகளையும் ஏப்பம் மூலமும் அதன் கழிவோடு சேர்த்தும் பின்னர் மாட்டு சானத்திலிருந்தும் வெளியேற்றுகிறது. இதனால் பூமி வெப்பமாவற்கு துணை செய்கிறது.
வளிமண்டலத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில வாயுக்கள் பூமியிலிருந்து வெளியேறும் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் பண்பு கொண்டவை. அதாவது கம்பளி ஆடை போன்றது. இந்த வாயுக்கள் இருப்பதால் தான் உயிரினங்களுக்கு ஏற்ற வளி மண்டலம் இந்த பூமியில் இருக்கிறது. ஆனால் அதே வாயுக்களின் சதவிதம் அதிகமாகும் பொழுது பூமியின் வெப்ப நிலை இன்னும் இன்னும் அதிகமாகும். இப்படி பூமியின் வெப்பம் அதிகமானால் பூமியின் தட்ப வெப்பம் மாறுதலுக்கு உள்ளாகும். பெரும் இயற்கை மாற்றங்களை உருவாக்கும். மனிதர்கள் வாழ முடியாத சூழல் உருவாகும்.
 
கால்நடைகள் அதிலும் மாடுகள் வெளியேற்றும் மீதேன், கார்பென் டை அக்ஸைட் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயுக்களின் அளவு மிக அதிகமாக இருக்கிறது என கால்நடை வல்லுநர்கள் (நம்ம ஊர் 'கோ' மகன்கள் அல்ல) கணித்துள்ளனர். கிரீன்ஹவுஸ் வாய்வுகள் பல்வேறு விதங்களில் வெளியேறுகின்றன. உதாரணமாக பெட்ரோல்,டீசல் ,நிலக்கரி போன்றவற்றை எரிப்பதால் உருவாகும். காடுகளையும் கடல் தாவரங்களையும் 'ஆல்கே'எனப்படும் பச்சையங்களை அழிப்பதாலும் அதிகமாகும்.
இந்த வகையில் உலகில் வெளியேற்றப்படும் இந்த வாயுக்களின் 18 விழுக்காடு கால்நடை மூலம் வெளியேறுகின்றன என்பது உறுதி செய்யப்பட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 18% என்பது நாம் கார், பைக், ப்ளேன் போன்ற போக்குவரத்து மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்படும் அளவை விட அதிகம் என்பது குறிப்பிட வேண்டிய ஓப்பீடாகும். அதாவது, மோட்டார் புகை போக்கி வழியாக வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்களுக்கு நிகராக மாடு வாயிலிருந்தும் அதன் ஆசன வாயிலிருந்து வாயுக்கள் வெளி வருகின்றன.ஆனால் நம் கவலை முழுதும் கோமியத்திலேயே ஊறிக்கொண்டிருக்கிறது!
மேலும் கால் நடைகளுக்காக உணவு உற்பத்தி செய்யவும் அவற்றை வளர்பதற்காகவும் பல காடுகள் அழிக்கப்படுகின்றன. இந்த கிரீன் ஹவுஸ் வாயுக்களில் ஒன்றான கார்பென் டை ஆக்ஸைடை (CO2) சுத்திகரிக்கும் ஆற்றல் மரங்களுக்கு மட்டுமே உண்டு. நமது தேவைக்காக, வாயுக்களை உறிஞ்சும் மரங்களை அழித்து அங்கு தீமையான வாயுக்களை உருவாக்கும் கால் நடைகளை வளர்த்து வருகிறோம். அதாவது கால்நடைகள் வளர்ப்பு எனும் தொழில் மறைமுகமாக இயற்கை மீது நடத்தும் தீய (பக்க)விளைவு எனலாம்.
இந்த கிரீன் ஹவுஸ் வாயுக்களில் மிக அதிகமாக வெப்பத்தை தக்க வைக்கும் தன்மை கொண்ட வாயுக்களான மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைட் போன்றவைகள் மிக அதிகமாக வெளியேற்றுவது மாடுகளும் கால் நடைகள்தானாம். இது இன்றைய நிலைதான். ஆனால் 2050 க்குள் கால் நடை மற்றும் விவசாயம் செய்வதன் மூலம் வெளியேறும் நச்சு வாயுக்கள் 80 விழுக்காடுகள் அதிகரிக்க செய்யும் எனவும் கணித்துள்ளனர்.

இதே நிலை நீடித்தால் பூமி வெப்பமாவதை தடுக்க முடியாது, பனிப் பிரதேச பனிப்பாறைகள் உருகுவதையும் தடுக்க முடியாது. பஞ்சம், வெள்ளம் இன்னும் நாம் கண்டிராத இயற்கை பேரிடர்களை தவிர்க்கவும் முடியாது. முடியவே முடியாதுங்க.
ஜல்லிகட்டாகட்டும், இப்பொழுது விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் பசுக் காதலாகட்டும் எனக்கு எரிச்சலை உருவாக்கி கொண்டிருந்தது. ஏன் இப்படி அதீத கால்நடைக் காதல் நமக்கு என.
இயற்கை மீது பற்றும் புனிதமும் காதலும் ரொமான்ஸும் இயற்கையை சீரழிக்கவே செய்யும் #வெரிபைட் . 
        இயற்கை மீது பக்தி, அதனோடு காதல், அதன் மீது பற்று, இன்னும் அதை தெய்வமாக பார்த்தல் போன்றவை புராதன மூட நம்பிக்கையில் ஒன்று - இந்த மூட நம்பிக்கை ஒட்டு மொத்த மானிடர்களுக்கும் பேரிடராக முடியப் போகிறது. இவை அனைத்தும் மனிதனின் பயத்தாலும் சுய நலத்தாலும் உருவாகும் ஒரு வித பீதி உணர்வே. இதற்கு நேர் எதிர் வாதம் இனி யாரும் மாடு வளர்க்க கூடாது யாரும் மாட்டை திங்க கூடாது என்பதாகும். இந்த இரு நேர் எதிர் பார்வைகளை தவிர்த்து அறிவியல் முறை பார்வை ஒன்று இருக்கிறது. அதுதான்
Social metabolism என்கிற முறை. 
 மார்க்ஸிய பார்வையில் சமுதாயத்தை விஞ்ஞான பூர்வமாக அனுகும் முறைதான் இந்த சோஷியல் மெட்டாபாலிச முறை, அதைப் பற்றி இந்த கட்றுஐயின் முடிவில் சுருக்கமாக விளக்கியுள்ளேன். 

மாடுகள் ஏன் இவ்வளவு வாயுக்களை வெளியேற்றுகின்றன? வாயுக்களை வெளியேறதுவது என்பது அதன் இயல்பு ( நம்மூரில் அது ஆக்சிஜன் வெளியேற்றுதுன்னு புனித கும்மி இன்னும் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது என்பது வேறு கதை). ஆனால் மாடுகள் மூலம் பெறப்படும் இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்காக மனிதர்களின் தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அதுதான் காரணம் . மாட்டை குறை சொல்லக் கூடாது. தன் உணவு எப்படி இந்த பூமியை பாழாக்குகிறது என்கிற புரிதல் இல்லாமல் " பணம்" என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு வளர்க்கும் நாம் தான் காரணம்.
இதற்கு தீர்வாக மனித மூளை தொழில் நுட்பத்தையே நாடும். குறைவான வாய்வுகளை வெளியேற்றும் மாட்டுத்தீவனங்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எல்லா பிரச்சனைகளுக்கும் பணம் / தொழில் நுட்பம் மட்டுமே தீர்வென நம்பும் அரசாங்கங்ளும்
அதற்குதான் பணத்தை செலவழிக்கும். ஆனால் தீர்வு கிடைக்க வாய்ப்பேயில்லை என்கிறார்கள்.
உலகின் ஒரு மூலையில் மனிதர்களுக்கு உண்ண உணவு இல்லை இன்னோரு மூலையிலோ மனிதன் மாடுகளிடமிருந்து கிடைக்கும் இறைச்சி பால் போன்றவற்றை உண்டு க(ளி)ழிக்க மாடுகளுக்கான உணவுகள் அதி தீவிரமாக வளர்க்கப்படுகிறது. இந்த சம நிலை சிதைந்து போனால் இயற்கை சம நிலையும் சிதைந்துதான் போகும். பூமி வெப்பமாகதான் செய்யும். சமுதாய முறை தீர்வு மட்டுமே உலகை காப்பாற்றும்.
எழுதிய பிறகு வாசித்துப் பார்த்தேன் டக்கென கமெண்ட் ஒன்று தோன்றியது - மத்தவனுக்கு கொடுக்காம அதிகமா திங்க,நாம் காடு மலையெல்லாம் அழிக்கிறோம். அதே சமயம் இன்னோரு பக்கம் புனிதம் ,காதல் என பல முறைகளில் மாட்டை பாதுகாக்கிறோம். மாடோ அது பாட்டுக்கு குசு விட்டு உலகத்தை அழிச்சிகிட்டிருக்கு. Shame on you human ... let me fart on your system என அசைபோட்டுகிட்டே இருக்கு நம்ம மாடுகள்..
ஒரு கோஷ்டி மாமிசம் நல்லதுங்குது இன்னோன்னு மூத்திரம் பால் சானி நல்லதுங்குது இந்த குமச்சலில் மாட்டுக் குசுவை கவணிக்காம விட்டுட்டாய்ங்க... ப்ளடி கவ் பாய்ஸ் அண்ட் கேர்ல்ஸ்.


........


சோஷியல் மெட்டபாலிசம்:
ஒரு உயிர் உட்கொள்ளும் உணவு, அதன் செறிமானம், அதை சக்தியாக மாற்றுதல் பின்னர் எஞ்சியதை கழிவாக்குதல் என்கிற ஒவ்வரு உயிர் செல்லிலும் நடக்கும் மிக அடிப்படையான செயலே மெட்டபாலிசம் ( வளர்சிதை மாற்றம்), இந்த வளர்சிதை மாற்றத்தின் மூலமே ஒரு உயிர் வாழ்கிறது, இனப்பெறுக்கம் செய்கிறது, சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறது, மூன்று வரிகளில் இதை சொல்ல முடிந்தென்றாலும் இதற்குள் நூற்றுக்கு அதிகமான இரசாயன மாற்றங்கள் நடப்பதே இந்த மெட்டபாலிசம்.

இதேபோலதான் சமுதாய மெட்டபாலிசம் எனப்படுவதும், மனிதன் எப்படி தன் சுற்றுப்புறத்திடம் வளங்களை பெருகிறான், அதை பொருளாக செய்கிறான், மெருகூட்டுகிறான், பயன்படுத்துகிறான், ஏதேதோ புதிய புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருகிறான், கழிவுகளை சுற்றுபுறத்திடமே அனுப்புகிறான். இந்த செயல் மனிதனின் அடிப்படை குணம் இது ஒரு உயிரின் மெட்டபாலிசத்திற்கு ஒப்பானது.
மனிதனின் வாழ்வின் இன்றியமையாத ஆதார செயல் இது.

இந்த முறை பார்வையில் எது இயற்கை என பிரிக்க முடியுமா என பாருங்கள்? மனிதரும் இயற்கையின் ஒரு அங்கம் எனும் பழய சிந்தனை என ஒதுக்கிவிட கூடாது, முதலாளித்துவ முந்தய காலத்தில் உனர்வுபூர்வமாக இந்த தொடர்பு உனரப்பட்டு வந்துள்ளதுதான் அதை மறுப்பதற்கில்லை, ஆனால் வெறும் உனர்வுபூர்வமான அந்த புரிதலில் இயற்கையின் மீது பயமும் மரியாதை இருந்ததே தவிர நேர்த்தியான செயலாக்கம் இருந்ததில்லை.
உனர்வு பூர்வமான புரிதலால் முதலாளித்துவம் கொண்டு வந்த சிரழிவுகளை தடுக்கவோ சரி செய்யவோ முடியவில்லைதானே. ஆனால் இந்த ”சமுதாய மெட்டபாலிசம் “ முறை பார்வையில் மனித சமுதாயம் எவ்வளவு அழகாக இயற்கையோடு அறிவால் ஒத்துக் கொள்லும் விதத்தில் ஒன்றாகிவிட்டது பாருங்கள்.
இந்த புரிதல் கொண்டு இயற்கை அழிவுகளை அனுகி பாருத்தால்? எப்படி இருக்கும்?
நாம் கட்டமைத்த இன்றைய சமுதாயத்திலிருந்துதானே செப்பனிடுதலை அரம்பிக்க முடியும். புதிய தொழில் நுட்பங்களை கொண்டு இயற்கையை சரி செய்துவிடலாம் என்கிற இன்றய நம்பிக்கையை சந்தேகிக்க முடியும்.
சமுதாய மெட்டபாலிசம் --- a paradigm shift...

Saturday, May 27, 2017

தேசியவாதங்கள்

தேசியவாதங்கள்:

முன்னுரை:

உலக அமைதிக்கு பெரும் ஆபத்து தேசியவாதம் என்பார்கள். ஹிட்லர் ,முசோலினியின் தேசியவாத கொள்கையே பாசிசத்தின் வழியாக உலகை உலுக்கியது என்பார்கள். ஒரு நாட்டின் தேசியவாதம் சீண்டவோ தூண்டவோ படுவதன் விளைவு பெரும்பாலும் போராக முடிய வாய்பபுண்டு என்கிற அச்சமும் உண்டு.

தேசியவாதம் என்பதை வெறும் 'உணர்வு சீற்றம்' என கருதினாலும் சரி , 'நிஜமான பிதற்றல்' என்றாலும் சரி, அல்லது வேறு விதமாக சொன்னாலும் சரி, அது உண்மைக்குப் புறம்பான  கூற்றாக இருந்தாலும் 'தேசியவாதம்' என்ற ஒன்றை மறுக்க முடியாது. அது மிகவும் சக்திவாயந்தது , பெரும் மாற்றங்களை கொண்டு வரவல்லது. 
ஒரு தேசத்தின் தேசியவாதம் எது என சரியாக கணிப்பதிலே ஒரு நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் இருக்கிறது. இந்தியா எனது தேசம் என்பது தேசியம்.
 ஏன் இந்தியா எனது தேசம் என்பதற்கான பதிலே தேசியவாதத்தை உருவாக்குகிறது. என் அருமை தம்பி தங்கைகள் இதை நுட்பமாக விளங்கிக் கொள்ள வேண்டும் . தேசியம் என்பதுவேறு, தேசியவாதம் என்பதுவேறு. Nationality vs Nationalism.  
  
மெயின் மேட்டருக்கு போகும் முன், ஒரு விஷயத்தை தெளிவிபடுத்திவிடுவோம். தேசியவாதம் என்பது ஒரு கட்டமைப்பு, அது கற்பனை. நம் தேசிய அபிமானம் நம்மை இது கற்பனை அல்ல உண்மைதான் என்று சொல்ல வைக்கும். அது எதிர்பார்த்ததுதான். 

மனித இனத்தின் வரலாற்றில் மிக முக்கிய அம்சம் பேசுவது, எழுதுவது, புதிய கருவிகளை உருவாக்குவதல்ல . இந்த உலகிலே இல்லாத ஒன்றை கற்பனை செய்வதும், அந்த கற்பனையை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் திறனும் ,பின்னர் கற்பனையை முன்னிறுத்தி கூடும் கூட்டமே அனைத்து மிருகங்ககளையும் சக மனிதனையும் கூட எதிர்த்து வெற்றிபெற முடிந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

கற்பனை, கட்டுமானங்கள் போன்றவை தவறல்ல. நம் மனித இனத்தின் பெரும்கொடை. மனிதன் மற்ற மிருகங்களைவிட பலபடி முன்னேறி, இந்த உலகையே தன் ஆளுமைக்கு கீழ் கொண்டு வர காரணம் இந்த கற்பனையாக கட்டமைக்கும் திறன் தான். அவன் உலகில் பார்த்திராத, இந்த உலகிலே இல்லாத ஒன்றை அவனால் மனதுக்குள் உருவாக்கமுடியும் என்பதே பெரும் ஆற்றல். 

Human is the only speices which can share myths among themselves என்கிறார்கள். இந்த மித் பலவகைப்படும், மதம், சாதி, பணம், வியாபாரம், வர்த்தகம், தேசம், மனித உரிமைகள், மிருக உரிமைகள், கம்யூனிசம், ஜனநாயகம் இன்னும் பலப்பல. அவனால் மட்டுமே ஒரு ஐடியாவை உருவாக்க முடியும். அந்த ஐடியாவைப் பற்றி கருத்து சொல்லமுடியும் , அதை கொண்டு அணி திரள முடியும்.
      
இந்தியா என்பது என்ன, இந்தியதேசியவாதம் எப்படி இருக்க வேண்டும் என பலரும் கற்பனை செய்திருப்பார்கள் அல்லவா. அதாவது நம் தேசத்தை உருவாக்கிய முக்கிய தலைவர்களை சொல்கிறேன். அவர்களின் நம்பிக்கை எப்படி இருந்தது என்பதைப் பற்றிய பார்வையே இந்த கட்டுரை.
  
குறிப்பிட்ட நான்கு தலைவர்களின் புத்தகங்கள், பேட்டிகள் அவர்களின் எழுத்திலிருந்து இந்தியா என்றால் என்ன, அது எப்படி இருக்க வேண்டும் , எது இந்த இந்தியர்களை ஒன்றாக பிணைத்து தேசியவாத எழுச்சியை உருவாக்க முடியும் என்பதை இக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.

முதலில் மகாந்தா காந்தி, பின்னர் நேரு, அடுத்து சார்வார்கர், கடைசியில் அம்பேத்கார் தேசியவாதம்  என்று ஒவ்வொன்றும் புதிய வித்தியாசமான இந்தியாவை உங்களுக்கு காட்டும், புதிய கட்டமைப்புகளை உருவாக்கும். இக்கட்டுரையில் இந்த நான்கு தலைவர்களின் கருத்துக்கள் உங்களோடு முட்டி மோதி, எண்ணத் தெரிப்புகளை உருவாக்க வைக்கும் என்று நம்புகிறேன் 
 

 மகாத்மாவின் தேசியவாதம்:


 மகாத்மா காந்தியின் தேசியவாதம் இந்த தேச எல்லையெல்லாம் கடந்த ஒன்று. 'தேசியவாதம் என்கிற பெயரில் வலிமையான தேசியத்தை 
கட்டியெழுப்பி, பின்னர் மற்ற தேசத்தை அடிமைபடுத்திச் சுரண்டும்  தேசியவாதம் அவசியமில்லை' என்கிறார் மகாத்மா. ஒரே போடு நெற்றியில். 
    
 காந்தி வாழ்ந்த காலம் என்பது தேசியங்கள் உடைந்தும், பிரிந்தும், சேர்ந்த வண்ணம் இருந்த காலம். அந்த நேரத்தில் கூட , எக்காரணம் கொண்டும் தன் மதிப்பீடுளை சிறிதளவு கூட குறைக்காது எடுத்து எடுத்து வைக்கிறார். 'என் தேசியத்தின் மீதான பற்று இன்னோரு தேசத்து மனிதன் ஒருவனை காயப்படுத்த கூடாது' என்கிறார். காந்தியின் கீழ் காணும் வரிகள் இன்றும் வாசிக்கும் போது ஒரு வித அச்சத்தை தருபவை. ஒரு  அரசியல்வாதிக்குள் இத்தனை பேரன்பா , பரந்த உள்ளமா என ஆச்சரியபட வைக்கும்.  அதுவே  அவர் மகாத்மா என்பதை மீண்டும் நிறுவும்.

" பொதுவாக தேசியவாதங்கள், தேசத்திற்காக ஒரு தனி மனிதன் தன் குடும்பத்தை இழக்கலாம் என்கின்றன. ஆனால் என்னை பொறுத்த வரை இந்த உலகம் 
மனிதாபிமானத்துக்காக ஒரு  தேசத்தை கூட இழக்கலாம் " என்கிறார். இந்தியாவை ஒரு புண்ணிய பூமி , இந்த உலகு இந்தியா மூலமே ரட்சிக்கப்பட முடியும். அதற்கான எல்லா தகுதியும், திறனும், வரலாறும், தத்துவமும் இங்கே கொட்டிக் கிடக்கின்றன என புகழ்கிறார்.  

ஆனாலும், அத்தகைய இந்தியாவை கட்டமைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக கவலைப்படுகிறார். 
காந்தியை பொருத்தவரை பிரிட்டிஷ்டமிருந்து நாம் பெறுவது சுதந்திரமே அல்ல, உண்மையான சுதந்திரம் ஆன்மீக சுதந்திரம்.
'ஒவ்வொரு மனிதனும் தன்னை சுதந்திரமான சிந்தனையும் செயல்பாடுகளும் கொண்ட அற்புத பிறவியாக உருவாக்கி கொள்ளும் நாளே இந்தியாவின் புதிய சுதந்திரம் ஆகும்' என்று  தெளிவுப்படுத்துகிறார். அதற்கு ஒரு திட்டமும் தருகிறார். அதுதான் சுயராஜ் (Swarajya). சுயராஜ் மூலம் எல்லா விதமான அடுக்கு மக்களையும் விழிப்புணர்வு கொள்ளச் செய்து, உலக 
நலனுக்கும், உலக ஆன்மீக விழிப்புணர்வுக்கும்
ஏற்ற மனிதர்கள் நிறைந்த பூமியாக மாற்ற வேண்டும் என்று விருப்பப்பட்டார்.  
   
'இந்தியா இங்கிலாத்தின் அடிமைத்தளைகளிடம் இருந்து மட்டுமல்ல, இன்னும் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளிடம் இருந்தும் 
விடுதலை அடைய வேண்டும் ,அதற்கு தன்னார்வ தொண்டு நோக்கத்தோடு இந்தியாவின் 
கிராமப்புறங்கள் சீரமைக்கப்பட்டு மெல்ல மெல்ல தனி 
மனித விடுதலையையும், இந்த தேசத்து 
விடுதலையையும் அடைய வேண்டும்' என்கிறார். சுய ராஜ்ஜியமே பூரண தேச விடுதலை.  இதை அகிம்சை வழியில் அடைந்து இந்த உலக தேசத்திற்கு வழிக்காட்டியாக இந்தியா இருக்கும் என நம்பினார். 
   
பாதி வாசிக்கும் போதே தெரிந்திருக்குமே... இதுக்கும் இன்றைய நிலைக்கும் சம்பந்தமே இல்லையென.

வீர்சார்வார்கர்  தேசியவாதம்:

காந்தியின் இந்தியாவானது அடைய முடியாத நிலையான utopian  சிந்தனையென்றால், அடுத்து வருவது ஹாலிவூட் மசாலா படம். இதோ சார்வார்கரின் தேசியவாத கதையின் மிகச் சுருக்கம். 

எகிப்திய நாகரீக காலத்துக்கும் , பாபிலோனிய நாகரீகத்துக்கும் முன்பு, அந்த காலம் எந்த காலம் என சொல்ல முடியாத ஒரு காலத்தில், ஆரியர்கள் எனும் இனம், அவர்களின் இருப்பிடமாயிருந்த 
பாரசிகத்தை விட்டு, சிந்து நதிகரையோரம் குடி புகுந்து, வேத மந்திர ஸ்லோகங்களையும், அக்னி 
குண்டங்களையும் வளர்க்க ஆரம்பித்தார்கள். ( அடுத்து எங்காச்சும் ஹெச். ராஜா ஆரியர்கள் வருகை கட்டுக்கதையென்றால் - உங்க தலைவர் சார்வார்கரும் கட்டு கதையதான் விட்டாரான்னு கேட்கனும், ஒகே வா) 
     
சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்ததால் இவர்கள் 'சிந்து' என்று அழைக்கப்பட்டார்கள் பின்னர் மருவி 'இந்து' என அழைப்பட்டார்கள். அவர்கள்  மெல்ல மெல்ல  இந்திய  துணை கண்டத்தை நோக்கி வந்தார்கள். ஏற்கனவே அங்கிருந்த வித்யாதாரர்கள், அப்சராக்கள், யக்சர்கள், ராட்சஷர்கள்,காந்தர்வர்கள்,கின்னாரர்கள் 
போன்றவர்களோடு நட்பாய் பழகி மெல்ல அவர்களோடு கலந்தனர்.ஆரியர்கள் மெல்ல பலுகிப் பெருகினார்கள். 
   
ஒரு வலிமை மிக்க தேசம் 
ஒன்றை உருவாக்கும் கனவு 
அவர்களை இந்த தேசத்தின் தென்பகுதி வரை  அழைத்துச் சென்றது.  இலங்கை தீவு வரை தங்கள் வெற்றியை நிலை நாட்டினார்கள். இலங்கையை வென்று தன் தலைநகரான அயோத்திக்கு ராமர் 
திரும்பிய அந்த தினத்தில்தான் இந்த  தேசம் முழுமையானது. 
           
ஶ்ரீராமரின் ஆரிய ரத்த சொந்தங்கள் மட்டுமின்றி தெற்கில் வாழ்ந்த அனுமன், சுக்ரிவன், விபீஷணன் போன்றோர் கலந்து கொண்ட ராமரின் பட்டாபிஷேகம்தான் இந்த தேசத்தின் முக்கிய நாள். ஆரியர்களும், ஆரியர் 
அல்லாதவர்களும் ஒன்றோடு ஒன்றாய் பிணைந்து உருவாக்கிய இந்தியா பிறந்த நாள் அது. இந்த பிணைப்பிலேயே இந்த தேசம் இன்று வரை பிணைந்தும்  கிடக்கிறது. ( அப்பிடியே ஜெயமோகனின் விஷ்னுபுரம் மாதிரி.)
     
ஶ்ரீராமர் ஆட்சியில் 
இணைத்து வைக்கப்பட்டது  இந்த நிலபரப்பு. அந்த நிலபரப்பில் தோன்றிய எல்லா தர்மங்கள், தத்துவங்கள்,கலாச்சாரங்கள், நாகரீகங்கள் போன்றவற்றை நம்புகிறவர்களும், அதை கடைப்பிடிக்கிற அனைவரும் இந்து இனம், அந்த இனமே இந்தியர்கள். இவர்களுக்கு மட்டுமே இந்தியா சொந்தம். 
   
 வாழ்வது யாராக இருந்தாலும் ஆள்வது நாங்கள் - இதான் அடிப்படை. 
 இது என்னப்பா காமெடி கதையால்லா இருக்குன்னு நீங்க நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். சார்வார்கர், இந்து என்பது மதமல்ல, அது ஒரு தத்துவ பாரம்பரியம் அல்லது கலாச்சாரம் ( sanscruti) என சொல்லி , எது இந்து? , யார் இந்தியன்? எதுவெல்லாம் இந்துத்துவம்? என்பதை நமக்கு புரிய வைக்கும் நேக்கு இருக்கு பாருங்க .அது காம்பெஸ் இல்லாமல் போட்ட வட்டம் மாதிரி தெளிவில்லாமல் சீரற்று இருப்பதாக தோன்றும். ஆனால் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தேசியவாதம் இதுவாகத்தான் இருக்க போகிறது என்பது என் யூகம். இதுதான் பாட திட்டத்திலும் வரும். அதில் சார்வார்கர் இறை தூதனாக பார்க்கப்படுவார். இதுதான் இந்து தேசியவாதக் கதை. படம் சூப்பர் ஹிட்டாகி இன்று நாடெங்கும் ஓடிக் கொண்டிருப்பது சோக கிளைகதை. 

 நேருவின் தேசியவாதம்:

கடந்த இரண்டு தேசியவாதங்களை விடவும் நம் மனதுக்கு நெருக்கமானதாக இது இருக்கும். இதில் எதையும் உங்களால் மறுக்க முடியாது. 
    
நேருவின் பார்வையில் இந்தியா என்பது பன்முக தன்மை கொண்ட தனித்துவமான நாடு. 'பல்வேறு விதமான கனவுகளையும், கருத்துக்களையும், கலாச்சாரங்களையும் பல்வேறு காலங்களில் அழித்து, அதன் மீது புதிய புதிய கனவுகளும் கலாசாரங்களும் அடுக்கடுக்காக எழுதப்பட்டாலும், அழிக்கப்பட்டவைகள் எதுவும் முழுமையாக அழிந்துவிடாமல், எச்சமாக மிச்சமாக நம்முள் இன்றும், நமக்கு தெரியாமலே நம்மோடு இருக்கிறது' என்கிறார் நேரு. 
  
நேருவும் இந்தியா மிக புராதனமானது என்பதை நம்புகிறார். நாகரிகத்தின் உச்சம் இந்தியா என சிந்து சமவெளி நாகரீகத்தை சுட்டிக் காட்டுகிறார். சார்வார்கர் போல ஆரியர்களின் வருகை, அவர்கள் திராவிடர்களோடு கலந்தது போன்றவற்றை சரித்திரபூர்வமானது என  எடுத்து நம் முன் வைக்கிறார். 
     
இந்தியாவின் வேத மரபுகள், தன்னையும் இந்த உலகத்தையும் ஞானமாய் அணுகிய அறிவாற்றல், மொழி கலாச்சார கலப்பு,மகாவீரரும் , புத்தரும் உலகுக்கு கொடுத்த தரிசனங்கள், வேதங்களும் உபநிடங்களும், இன்னும் இந்தியாவிடமிருந்து பிரித்து எடுக்க முடியாத பன்முக தன்மை, பல்வேறு வகை மனிதர்கள், உயிரினங்கள் என பண்டைய புகழும் வளமும் கொண்டது இந்தியா என் நம்புகிறார். 
          
இந்த இந்தியாவை  ஏதோ ஒரு சக்தி பிணைத்திருக்கிறது எனச் சொல்ல முடியும் , அது அவர்கள் வாழும் மண் மீது உள்ள மரியாதை என்றும் சொல்லும் நேருக்கு unity  in diversity தான் இந்தியா. ஏதோ ஒரு சக்தி இந்த பன்முக தன்மை கொண்ட, கலாசார கலவை கொண்ட, பல்வேறு சமூகங்களை இணைத்து இறுக்கி கட்டியுள்ளது என்பது நேருவின் அடிப்படை புரிதல்.
   
இது வரை வாசித்தது ஒன்னும் புதுசா இல்லையோ? எல்லாம் கேட்ட கதையா இருக்கேன்னு நினைச்சா, ஆமாம் கரைக்ட் .. இது தான் நாமும் நம் குழந்தைகளும் பள்ளியில் படித்தது .. படிப்பது. 
நேருவின் கருத்தும், அப்பொழுது வாழ்ந்த மேட்டுக்குடி அறிவாளிகளின் கருத்தும் இதுவாகவே இருந்திருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். Left liberal thought னு சொல்லுவாங்க. 
      
இந்த தேசியவாதம் மெல்ல மெல்ல தன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது .. என்பது கலக்கமாக கூட இருக்கும். 

அடுத்து அம்பேத்கர்... 
 அதற்கு முன் முக்கியமான மேட்டர் ஒன்னு, நான் இந்த தலைவர்களின் தேசியவாத கருத்துக்களை படிக்கும் பொழுது முக்கியமான விஷயம் ஒன்று புரிந்தது. அதாவது எல்லா தலைவர்களுக்கும் இந்தியா பாகிஸ்தான் பிரிவு அவர்களுக்குள் ஒருவித பதட்டத்தையே உருவாக்கி இருந்திருக்கிறது. பாகிஸ்தான் பிரிவுக்கு எந்த முறையான காரணத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து அடுத்து இதே போல் ஒவ்வொரு குழுவாய் பிரிந்து விடுவார்களோ என்கிற பயமும் இருந்ததாக எனக்கு தோன்றியது ... அந்த பயம் அவர்களின் தேசியவாத கருத்திலும் பிரதிபலித்தது என்றும் சொல்ல முடியும் . 
     
ஆனால் அம்பேத்கர் மட்டும் மிகத் தெளிவாக எந்த குழப்பமும் இன்றி தன் கருத்தை ஒரு நீதியரசர் போல அராய்ந்து சொல்லிருப்பது எனக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது.

அம்பேத்கரின் தேசியவாதம்: 

அம்பேத்கரை வாசிக்கும் பொழுது கிட்டதட்ட கடந்த மூன்று தேசியவாதங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும்  உள்ள  முரண்பாடுகளுக்கு  பதில் கிடைத்தது போல இருந்தது. 
         
அம்பேத்கரும் நேரு போல இந்திய இனத்தை கலப்பின இனம் என்கிறார் . அடுத்து, "இந்து எனும் பெயர் இந்த நிலபரப்பில் வாழும்  மனிதர்களை குறிக்க முகமதியர்கள் வைத்த பெயரே. இந்து என்கிற பெயர் எந்த சமஸ்கிருத படைப்பிலும் பார்க்க முடியாது" எனச் சொல்கிறார். 
      
இதெல்லாம் கிட்டதட்ட நேரு மற்றும் சார்வார்கர் போலதான். ஆனால் அடுத்த வரியில் இதுவரை நம்பியிருந்த அனைத்தையும் கலைத்து போடுகிறார் பாருங்கள். "இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்த நிலப்பரப்பில் வாழ்கிறவர்கள் அவர்களுக்கென தனியாக, தனித்துவமாக தங்களுக்கு பெயர் வேண்டும் என்று கூட எண்ணவில்லை. அப்படியான சமுதாய உணர்வோடு அவர்கள் என்றும் வாழ்ந்ததே இல்லை "என்கிறார்.
       
இந்திய சமுதாயம் பல்வேறு சாதிகளின் கூட்டமைப்பு, அவ்வளவுதான். சமுதாயம் மற்றும் தேசம் போன்றவற்றை பற்றி பேசும் அம்பேத்கர் உணர்ச்சி வசப்பட்டு கதையளக்காது, தன் சாதி, தன் மதம், தன் மாநிலத்தை முன்னிறுத்தி சொந்தம் கொண்டாடும் விதமாய் கதைவிடாமல்,   மனித உளவியலை புரிந்து, அறிவியல் துணையோடு தீர்க்கமாக அனுகுகிறார். அவரை பொறுத்தவரை, இந்து சமுதாயம் பல சாதிகளால் ஆனது. அதுவும் Amorphous society என்கிறார் . அதாவது எந்த வித தெளிவான, ஸ்திரமான இணைப்புகள் இல்லாத சமுதாயமாக இருக்கிறது என்கிறார். 
       
தேசிய உணர்வு கொண்டு வாழ முதலில் சமுதாய உணர்வோடு வாழ்தல் வேண்டும் என மிக அடிப்படையிலிருந்து தேசியத்தை குறித்து தன் விமர்சனத்தை முன் வைக்கிறார். அருகருகே வசிப்பதால் மட்டும் சமுதாய உணர்வோடு இருப்பதாக அரத்தமில்லை. 
அது போலவே ஒரே பழக்க வழக்கம், ஒரே நம்பிக்கைகள் மற்றும் சிந்தனையோடு இருக்கும் குழுக்கள் சமுதாயங்களாக  மாறிவிடாது. மனிதர்களிடைடே ஒரே மாதிரியான கூறுகள் இருப்பதால் மட்டும்  மனிதர்கள் சமுதாயமாக வாழ்கிறார்கள் என அர்த்தமில்லை என சொல்லும் பொழுது நேரு, காந்தி , வீர்சார்வாகர் கட்டிய அனைத்து மாயாவாத மேஜிக் கூறுகளை சுலபமாக அம்பேத்கர் மறுப்பது இலகுவாக நமக்கு புரிகிறது. 

அம்பேத்கரை பொறுத்தவரை 
"மனிதர்கள் தங்களுக்குள் பொதுவான கூறுகளை பகிர்ந்து வாழ்ந்தால் மட்டுமே அவர்கள் சமுதாயமாக வாழ்கிறார்கள் என அர்த்தம்". அவர்களுக்கு இடையில் நடக்கும்  பரிவர்த்தனைகளே இந்த பொதுவான கூறுகளை கட்டமைக்கும், அதுவே சமுதாய உணர்வை உருவாக்கும் என்பது அம்பேத்கரின் சிந்தனை. 
     
செத்தாலும், ஜெயித்தாலும், கூடி தின்னாலும், ஒரே சாதிக்குள்ளேதான் நடக்கும். மேலும் அவர்களுக்குள்ளே திருமணம் செய்து கொள்வார்கள் . 
கொடுக்கல் வாங்கல் எல்லாமே அதே சாதிக்குள்தான். சாதிக்கு என கோவில் , குளிப்பிடம், கூடுமிடம் என எல்லா சாதிகளும் அவர்களுக்குளேயே உலகை தீர்மானித்துக் கொள்கிறார்கள் என்கிறார். 
      
என் மொழிபெயர்ப்பில் அம்பேத்கரின் இந்த கருத்து காணாமல் போய்விட கூடாது என்பதால் .. அவரின் வார்த்தைகளையே இங்கு தருகிறேன் 
"Men constitute a society because they have things which they possess in common. To have similar things is totally different from possessing things in common. And the only way by which men can come to possess things in common with one another is by being in communication with one another. This is merely another way of saying that Society continues to exist by communication—indeed, in communication. To make it concrete, it is not enough if men act in a way which agrees with the acts of others. Parallel activity, even if similar, is not sufficient to bind men into a society." 
     
இந்த பரிவர்த்தனைகள் நடக்க கூடிய எல்லா வாய்ப்புகளையும் இந்தியாவில் சாதி என்கிற ஒன்று தடுத்து விடுகிறது என்கிறார் அம்பேத்கர். 
இந்துவின் தேசிய உணர்வுக்கு  சாதி தடை . அதைப் போல முஸ்லிம்களுக்கு அவர்கள் மதம்!!! இந்துக்களின் சாதி வெறிக்கு நேர் நிகரா, முஸ்லிம்கள் குருட்டுத்தனமாக பின்பற்றும் மத கொள்கைகளை சாடுகிறார் அம்பேத்கர். குழந்தைகள் திருமணம், முஸ்லிம்களின் விவாகரத்து முறை, பெண்களின் நிலை , இந்துக்கள் அளவு இல்லையென்றாலும் முஸ்லிம்களிடமும் காணப்படும் சாதி வேறுபாடுகள். மதம் சார்ந்த சமுதாய கூட்டணி , மதத்தை மட்டும் முன்னிறுத்தி  செய்யும் அரசியல் ,  இஸ்லாமில் இருக்கும்  அடிமைத்தனம் போன்றவற்றை சாடுகிறார். இத்தகைய சமுதாய சீர்கேடுகள் இருந்தும் அதை அகற்றக் கூடிய எந்த இயக்கமோ, அதற்கான செயல்பாடுகளோ அவர்களிடம் இல்லை என்பதே மிக கவலை அளிப்பதாக இருக்கிறது என்கிறார்.
       
குறிப்பாக இந்த தேசம் தாண்டிய அவர்களது மதக் காதலை தெளிவாக கண்டிக்கிறார். ( கிலாபத் இயக்கம்).மேலும் இந்திய முஸ்லிம்கள் தங்களை இந்துக்கள் ஆக்கிரமித்து விடுவார்களோ என்கிற பயம் அவர்களை மாற விடாது வைத்திருக்கிறது என்றும் ஆதாரபூர்வமாக நிறுவுகிறார்.
         
அம்பேத்கரின் மிக நேர்மையான, பகட்டற்ற பகுத்தறிவை வாசிக்கும் பொழுது முழுமையான தேச அபிமானமாக எனக்கு படுகிறது .  அவரின் தேசியவாத கருத்தை இந்தியாவின் தேசிய கொள்கையாக்கிருந்தால், ஐரோப்பிய நாட்டுக்கு இணையாக இன்று நாம் இருந்திருந்திருப்போம் என்பது உண்மையான உண்மை. நோ டவுட்.

முடிவுரை: 

 இது வரை நாம் பார்த்த நான்கு தலைவர்களின் கருத்தை உற்று நோக்கினால் ஒரு பொதுதன்மை தெரியும். குறிப்பாக காந்தி, நேரு மற்றும் சார்வர்கரின் கருத்துகள், இந்த தேசம் ஏதோ ஒன்றால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவது போலவும், அம்பேத்காரின் கருத்து அதை உடைப்பதாகவும் அல்லது அதற்கு முக்கியத்துவம் அளிக்காததையும் பார்க்கலாம் . 
             
'இந்தியர்களிடம் இருப்பது தேசபற்றே அல்ல, அவர்களுக்கு இருப்பதெல்லாம் சாதி பற்றும், மத பற்றும் மட்டுமே. தீண்டாமை மட்டும் இந்த தேசத்தில் எல்லா இடத்திலும் பொதுவா இருக்கிறது' என்கிறார் அம்பேத்கர்- மறுக்கவே முடியாது. 
      
அவர்களின் பன்முக கலாசாரங்கள் கூட, தங்கள் சாதியின் பழக்கவழக்கம் ,  உடை , அலங்காரம், சடங்கு முறை என எல்லாவற்றிலும் அடுத்த சாதியை காட்டிலும் வேறுபடுத்திக் காட்ட முயன்றதால் வந்த விளைவே என்கிறார். ( செம இல்ல!!!!) - நேருவின் பன்முக பார்வையில் இருந்தது ரோமாண்டிஸமோன்னு இது யோசிக்க வைக்குது. 
   
சாதி, கூட்டு சமுதாய உணர்வை அழித்தொழிக்கிறது.
சாதி ,பொது சேவையை தடுக்கிறது. 
சாதி ,மனிதர்களின் நேர்மையையும், அவர்களின் விசுவாசத்தையும் அவன் சாதிக்கு மட்டுமே உரித்தாக்கி வாழ வைக்கிறது. அப்படித்தான் இப்பொழுதும் இருப்பதாக நானும் ஒத்துக் கொள்கிறேன். 

கிலாபத் இயக்கத்தை முஸ்லிம் லீக் முன்னெடுத்து போவதை, முஸ்லிம்களின் தேச எல்லை தாண்டிய மத உணர்வை, காந்தி போன்றோர் அரசியலாக்குவதை , இந்து மகாசபையின் செயல்பாடுகளையும், மிக நேர்மையுடன் விமர்சனம் செய்கிறவர் அம்பேத்கார் மட்டுமே என தெளிவாக தெரிகிறது .மேலும் காந்தியின் மிக உயர்ந்த உண்ணத கருத்துகளை அடைய வேண்டுமெனில் அது அம்பேதகரின் சிந்தனைகளை நடைமுறைபடுத்துவதால் மட்டுமே அடைய முடியும் எனவும் தோன்றுகிறது. அப்படி செய்திருந்தால்,
இன்று போல மதம் இந்த நாட்டின் அரசியலாக இருந்திருக்காது - மனித மாண்பும் உழைப்பும் அரசியலாகியிருக்கும்!!! 
 
 "Liberty, Equality and Fraternity -  இதுவே தனது கொள்கை, இதுவே இந்த  தேசத்தின் கொள்கையும் கூட... 
1. Fraternity  - புரிந்துணர்வு
2. Equality  - சமத்துவம்
3. Liberty - விடுதலை
 
இதுவே தன் கொள்கைகள்" என அறிவிக்கும் அம்பேத்கர் "இதெல்லாம் பிரான்சில் இருந்து எடுக்கப்பட்டவை என யோசிக்காதீர்கள்  இவை அனைத்தும் புத்தரின் ஞானத்திலிருந்து  புரிந்து கொண்டது" என ஒரே வரியில் வீர்சார்வார்கரின் இந்து தேசியவாதத்தை ஆட்டம் காட்டுகிறார். 
       
இந்த Fraternity  - புரிந்துணர்வு, சமத்துவம், விடுதலை கூட இயற்கையில் கிடையாது, எல்லாம் கற்பனையே , இவைகள் கதையாடலே ... ஒரு வகையான மித் , ஆனால் இதை நம்பும் மனிதர்கள் இந்தியாவில் இப்பொழுது கம்மி. தேசியவாதம் என்பது கூட்டாக பலரும் நம்பும் ஒரு கதையாடல் தானே.அது காலத்துக்கு ஏற்ற வகையில் மாறிக்கொண்டே தான் இருக்கும். பிரபலமாக இருக்கும் கதையாடலை தோற்கடிக்க அதை விட இன்னோரு வலிமையான கதையாடல் அவசியம்.. வலிமை என்பது கதையாடலில் இல்லை அதை எவ்வளவு காலம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறோம் என்பதில் இருக்கிறது. 
    
இதைதான் ஆர்.எஸ்.எஸ் செய்து கொண்டே இருந்தது . எத்தனை தேர்தல்கள்!  எத்தனை தடை உத்தரவுகள். ஆனாலும் மனம் தளராது சார்வார்கரின் கதையாடலை உயிரோடு வைத்திருந்தார்கள். 

காந்தியின் utopian தேசியம் , நேருவின் மேஜிக்கல் தேசியம், 
வீர்சார்வர்கரின் ஜூராசிக் தேசியத்திற்கு
மத்தியில், இந்த இந்திய நாட்டின் நன்மைக்கும், அதன் வளர்ச்சிக்கும், உண்மையான தேசியத்திற்கும், வளமான வலிமையான ஆண்மையான தேசத்திற்கும் ஏற்ற கொள்கை அம்பேத்கருடைய கொள்கை என்றே தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம்.
அட்லீஸ்ட்...


ஜெய் பீம்!! 
நீல் சலாம்!! 

Notes from : 
*Discovery of India - Nehru. 
*Gandhi concept of swaraj by Dr P.P. Singh
*India my dream - MK .Gandhi
*Pakistan or the partition of India - by Ambadkar
*Essential of Hindutva - V.D Sarvarkar
*Cast prevented Hindus from forming a real society or nation - Dr Ambedkar 
*Hindutva- exploring the idea of Hindu nationalism- Jyotirmaya Sharma.
*Pakistan and the malaise - Dr Ambedkar

முற்றும்.

Sunday, October 9, 2016

கருனை, அன்பு, பாவம் , உணர்வுகளை தாண்டிய பாரா ஒலிம்பிக்ஸ்

 கருனை, அன்பு, பாவம் , உணர்வுகளை தாண்டிய பாரா ஒலிம்பிக்ஸ்   தனக்கான புதிய கணவை உருவாக்கி கொள்வது, வாழ்கையோடும் சமுகத்தோடும் தன்னை பினைத்து கொள்ளுவது என்பது மனிதரிகளின் தேவையான ஒன்று, பலருக்கு இது தானாக நிகழ்ந்துவிடுவது உண்டு. கணவுகளில் பெரியது சிறியது என இருக்குமே தவிர, ஏதாவது ஒரு முனைப்பு ஒன்று ஒவ்வருவரையும் முன்னகர்த்தி சென்று கொண்டேதான் இருக்கும்   அது குடும்பமாக இருக்கலாம், குழந்தையாக இருக்கலாம், கலையாக இருக்கலாம் வேலையாக இருக்கலாம், தான் எனும் ஈகோவாக இருக்கலாம், சமுக சேவை, கடவுள் என இன்னும் எதுவாகவும் இருக்கலாம்.  இதை  செயல்படுத்த மனபூர்வமாக அனுபவிக்க  முக்கியமான தேவை உடல் , உடல் நலம் உடல் வளம் இதுவே நம் எண்ணங்களை செயலாக்கும் கருவி என சொல்லவிட முடியும். ஆனால்  வாழ்வோடு தனனை பினைத்து கொள்ளவும் தனக்கு பிடித்தவையோடு முனைப்பாக முன் நகர பெரும் தடை உடல் குறைபாடுகள். அது  பலரை இன்னும்  இருட்டிலே வைத்துவிடுவதும், ஒதுக்கிவிடுவதுமாக இருப்பதே எதார்த்தமாக நாம் பார்க்கும் சூழல். பாரா ஒலிம்பிக்ஸ் உடல் குறை உள்ளவர்களுக்கான விளையாட்டு பற்றி எழுத போகிறேன் என்றதும் எனக்குள் வந்த முதல் குழப்பம் உடல் உனமுற்றவர்களை எப்படி இந்த கட்டுரையில் குறிப்பிட போகிறேன் என்பதுதான். ஊனம், உடல் உணம், குறைபாடு, ஊனமுற்றோர், பார்வையற்றோர், மாற்று திறனாளிகள், இப்படி பல சொற்கள் தமிழில், இன்னும் நம்மோடு வாழும் மனிதர்களை எப்படி குறிப்பிடுவது என்பதிலே சிக்கலோடு இருக்கும் இந்த சூழலில்தான் இதைப் பற்றி எழுத வேண்டிதான் உள்ளது.  

   
     இரண்டாம் உலகப் போரின் பொழுது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தவர்தான் லுட்விக் குட்மென் எனும் ஜெர்மானிய யூத மருத்துவர். முதுகு தண்டில் அடிப்பட்டு படுக்கை படுக்கையாக இருக்கும் ரானுவ வீரர்களை பராமாரிக்கும் மருத்துவமனை பிரிவுக்கு தலைமை பொருப்பேற்றவரைப் பற்றி எழுதிதான் பாரா ஒலிம்பிக்ஸ் பற்றி ஆரம்பிக்க முடியும்.  அந்த காலத்தில், முதுகு தண்டில் அடிப்பட்ட ரானுவ வீரர்களை இங்கு வந்து சேர்த்து விடுவார்கள். குறைந்தது இரு வருடத்துக்குள் அப்படி சேர்த்தவர்கள் இறந்து விடுவார்கள். அது வரை அன்பும், கருணையும், அமைதியும், இன்னும் அதிக பாசமான கவனிப்பும் இங்கு கிடைக்கும். சாகும் வரை அவ்வளவு கரிசனத்தோடு பார்த்து கொள்வார்கள். மூளை நரம்பு நிபுணரான குட்மெனுக்கு இதில் விருப்பமில்லை. போர் வீரர்கள் படுத்த படுக்கையாக கிடந்து, புண் வந்து செத்து போகும் நிலையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை மாற்ற நினைத்தார். இரு மணி நேரத்திற்கு ஒரு முறை விபத்து அடைந்து, படுத்த படுக்கையாக இருப்பவர்களை, படுக்கையை விட்டு எடுத்து... சிறு சிறு உடற்பயிற்சிகள் அளிக்கச் சொன்னார். மனமும் உடலும் வலுப் பெற, விளையாட்டை அறிமுகம் செய்தார். அவர்களுக்குள் போட்டி வைத்து கொண்டாடினார்.   அவர்களுக்கு வாழ்கை இருக்கிறது என உணர்த்தினார், கணவு கான வைத்தார் அதன் விளைவு. தண்டு வட விபத்தில் காயமடைந்தவர்கள் இன்னும் நீண்ட காலம் வாழ ஆரம்பித்தார்கள். இவரது உடல் பயிற்சி மற்றும் விளையாட்டு மூலம் அளித்த மாற்றம் இப்படி காயமடைந்தவர்கள் மத்தியில் புதிய புத்துணர்ச்சியையும், மாற்றத்தையும், வாழ்க்கையில் பிடித்தலையும் உருவாக்கியதுபின்னர் இவர்களது விளையாட்டை.... 1948 லண்டன் ஒலிம்பிக்ஸில் அறிமுகபடுத்தினார். பின்னர் அதே நாளில் வருடம் தோறும் இப்படி மாற்று திறனாளிகளுக்கு போட்டிகள் நடத்தினார். குட் மேனின் முனைப்பு அக்காலத்தில் உடல் ஊனமுற்றவர்களின் மீது சமுதாயம் அன்பு, பாசம், நேசம், கருணை எனச்சொல்லி ஒதுக்கி வைக்காது அவர்களை அவர்களாக உணர செய்தது அவர்களை சமுதாயத்தின் அங்கம் என நம்ப செய்தது எனக் கூட சொல்ல முடியும் .
இன்றும் நம்மூரில் நம் பாவ புண்ணியங்களை போக்கவும்.. நமது பரந்த விரிந்த கருணை உள்ளங்களை காட்டவுமே இவர்களை வைத்திருக்கிறோம் .                   அய்யோ பாவம் என்று இவர்கள் மீது கருணை காட்டி ஒரு சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறோம் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.
இவர்கள் மீது காட்டும் அன்பும் கருணையும் இவர்கள் இப்படி இருக்கும் நிலையை கண்டு அவமான படுதலில்லிருந்தே துவங்குகிறது.    1948 ஆம் ஆண்டு லண்டனில் மாற்றுதிறனாளிகளின் விளையாட்டை அறிமுகபடுத்தியிருந்தாலும் அடுத்த ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் இவை மெல்ல மாற்றங்கள் உருவாக்கி... 1960 ஆம் ஆண்டு ரோமில் முதல் பாரா ஒலிம்பிக்ஸாக நடைபெற்றது. இந்த வேளையில் "பாரா" என்பதன் அர்த்தம் என்னவென தெரிந்து கொள்வது அவசியம். கிரேக்க சொல்லான "பாரா" என்றால்... "தன்னையொத்த" அல்லது "இணையான" என அர்த்தம். இணையானவர்களுக்காக பொது ஒலிம்பிக்ஸிக்கு நிகராக நடத்தபடும் ஒலிம்பிக்ஸ் என அர்த்தப்படும்இந்த பாரா எனும் வார்த்தையை கூட அறிமுகம் செய்தவர் குமேன் ஆவார்அதை தொடர்ந்த பல ஒலிம்பிக்ஸ் நடந்தாலும் 1988 சியோலில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து பொது ஒலிம்பிக்ஸ் நடக்கும் நகரத்திலே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது

      யார் இந்த பாரா ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள முடியும், முக்கியமா மூன்று பிரிவுகள் உள்ளது, உடல் குறை பாடுகள் உள்ளோர், பார்வை குறைபாடு, நரம்பு மூளை செயல்பாடு குறைவு உடையவர்கள். இம்மூன்று பெரும் பிரிவுக்கு கீழ் பல உட் பிரிவுகள் உண்டு. ஒரு விளையாட்டின் வெற்றி தோல்வி என்பது சோர்வடையாமல் நீண்ட நேரம் தனது உடல் வலு, உடல் ஆற்றல், மனதை ஒருமுகபடுத்தும் திறன் , விளையாட்டின் நுனுக்கத்தோடு முறையாக விளையாடும் திறனால் மட்டுமே நிர்னயக்கப்பட வேண்டும் , உடல் குறைபாடுகள் கொண்டு விளையாட்டின் வெற்றி தோல்வி நிர்னயம் செய்ய்யக்  கூடாது , அதாவது ஒரே மாதிரியான குறைபாடுகள் கொண்டவர்களுக்குள்ளே போட்டி நடத்தப்பட வேண்டும் என்கிற கொள்கையின் படி சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டியினர் உடல் குறைபாட்டைக் கொண்டு பிரிவுகள் உருவாக்கினார்கள் , இதன் மூலம் ஒரே பிரிவினருக்கிடையிலே விளையாட்டு திறன் உடல் மன திறன் பரிசோதிக்க முடிகிறது.   உதாரணமாக, கை கால் இழுத்தவர்கள், கால்களின் உயரம் சமமாக இல்லாதவர்கள், பார்வை முழுவதுமாக இழந்தவர்கள், என பல பிரிவுகள் உண்டு.  வீரர் அவர் தேர்ந்தடுக்கும் விளையாட்டை விளையாட அவரது உடல் குறைபாடு எந்த அளவு தடையாக இருக்கிறது என்பதை கொண்டே உள் பிரிவு உருவாக்கப்படுகிறது.


          இந்த முறை ரியோ பாரா ஒலிம்பிக்ஸ் ஜோதியை ஏற்ற தன் நாற்காலியில் முன்னேறி போகிறார், அங்கு அவர் முன் பல படிகள் ஆனால் ஜோதியை கொண்டு சேர்க்க வேண்டிய இடமோ உயரத்தில், என்ன செய்ய என அங்கு அமைதி, இசை நிறுத்தப்படுகிறது, பார்வையாளர்களுக்கு குழப்பம், எல்லாம் அமைதி... அரை நிமிடம் கழித்து அந்த படிகளுக்குள் அழகிய சறுக்கு பாதை ஒன்று உருவாகிறது, அதன் வழியாக ஒலிம்பிக் தீபத்தை எடுத்து செல்கிறார். வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாத கதை சொல்லல் இது, உடல் உணமுற்றோர் ஒவ்வருவருக்கும் ஏற்ப்படும் அந்த உணர்வின் சிறு துளியை சிறு மணி நேரம் பார்வையாளர்களுக்குள் கடத்தி சென்ற தருணம் அது.

          குட்மென் மாதிரி இங்கு ஒருவர் வேண்டும் !!  குட்மெனின் சிறிய கனவு இன்று உலக பேரதிசயமாய், புதிய புதிய கதைகளையும், வாழ்வின் மீது பற்றுதலையும், வீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் அளித்து வருகிறது. அன்பும் கருனையும் நேசமும் கரிசனை அல்ல தேவைபுதிய சொற்களின் உற்பத்தி அல்ல.  அவர்களையும் சேர்த்து கொண்டாடவும் முன்னேறவும் செய்கிற புதிய பாதை புதிய நோக்கு புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் அந்த ஒலிம்பிக் தீபம் ஏற்றிய வீரனின் முன் நிகழ்ந்த மாற்றம் போல அதுவே இங்கு அவசியம்