Saturday, May 27, 2017

தேசியவாதங்கள்

தேசியவாதங்கள்:

முன்னுரை:

உலக அமைதிக்கு பெரும் ஆபத்து தேசியவாதம் என்பார்கள். ஹிட்லர் ,முசோலினியின் தேசியவாத கொள்கையே பாசிசத்தின் வழியாக உலகை உலுக்கியது என்பார்கள். ஒரு நாட்டின் தேசியவாதம் சீண்டவோ தூண்டவோ படுவதன் விளைவு பெரும்பாலும் போராக முடிய வாய்பபுண்டு என்கிற அச்சமும் உண்டு.

தேசியவாதம் என்பதை வெறும் 'உணர்வு சீற்றம்' என கருதினாலும் சரி , 'நிஜமான பிதற்றல்' என்றாலும் சரி, அல்லது வேறு விதமாக சொன்னாலும் சரி, அது உண்மைக்குப் புறம்பான  கூற்றாக இருந்தாலும் 'தேசியவாதம்' என்ற ஒன்றை மறுக்க முடியாது. அது மிகவும் சக்திவாயந்தது , பெரும் மாற்றங்களை கொண்டு வரவல்லது. 
ஒரு தேசத்தின் தேசியவாதம் எது என சரியாக கணிப்பதிலே ஒரு நாட்டின் எழுச்சியும் வீழ்ச்சியும் இருக்கிறது. இந்தியா எனது தேசம் என்பது தேசியம்.
 ஏன் இந்தியா எனது தேசம் என்பதற்கான பதிலே தேசியவாதத்தை உருவாக்குகிறது. என் அருமை தம்பி தங்கைகள் இதை நுட்பமாக விளங்கிக் கொள்ள வேண்டும் . தேசியம் என்பதுவேறு, தேசியவாதம் என்பதுவேறு. Nationality vs Nationalism.  
  
மெயின் மேட்டருக்கு போகும் முன், ஒரு விஷயத்தை தெளிவிபடுத்திவிடுவோம். தேசியவாதம் என்பது ஒரு கட்டமைப்பு, அது கற்பனை. நம் தேசிய அபிமானம் நம்மை இது கற்பனை அல்ல உண்மைதான் என்று சொல்ல வைக்கும். அது எதிர்பார்த்ததுதான். 

மனித இனத்தின் வரலாற்றில் மிக முக்கிய அம்சம் பேசுவது, எழுதுவது, புதிய கருவிகளை உருவாக்குவதல்ல . இந்த உலகிலே இல்லாத ஒன்றை கற்பனை செய்வதும், அந்த கற்பனையை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் திறனும் ,பின்னர் கற்பனையை முன்னிறுத்தி கூடும் கூட்டமே அனைத்து மிருகங்ககளையும் சக மனிதனையும் கூட எதிர்த்து வெற்றிபெற முடிந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

கற்பனை, கட்டுமானங்கள் போன்றவை தவறல்ல. நம் மனித இனத்தின் பெரும்கொடை. மனிதன் மற்ற மிருகங்களைவிட பலபடி முன்னேறி, இந்த உலகையே தன் ஆளுமைக்கு கீழ் கொண்டு வர காரணம் இந்த கற்பனையாக கட்டமைக்கும் திறன் தான். அவன் உலகில் பார்த்திராத, இந்த உலகிலே இல்லாத ஒன்றை அவனால் மனதுக்குள் உருவாக்கமுடியும் என்பதே பெரும் ஆற்றல். 

Human is the only speices which can share myths among themselves என்கிறார்கள். இந்த மித் பலவகைப்படும், மதம், சாதி, பணம், வியாபாரம், வர்த்தகம், தேசம், மனித உரிமைகள், மிருக உரிமைகள், கம்யூனிசம், ஜனநாயகம் இன்னும் பலப்பல. அவனால் மட்டுமே ஒரு ஐடியாவை உருவாக்க முடியும். அந்த ஐடியாவைப் பற்றி கருத்து சொல்லமுடியும் , அதை கொண்டு அணி திரள முடியும்.
      
இந்தியா என்பது என்ன, இந்தியதேசியவாதம் எப்படி இருக்க வேண்டும் என பலரும் கற்பனை செய்திருப்பார்கள் அல்லவா. அதாவது நம் தேசத்தை உருவாக்கிய முக்கிய தலைவர்களை சொல்கிறேன். அவர்களின் நம்பிக்கை எப்படி இருந்தது என்பதைப் பற்றிய பார்வையே இந்த கட்டுரை.
  
குறிப்பிட்ட நான்கு தலைவர்களின் புத்தகங்கள், பேட்டிகள் அவர்களின் எழுத்திலிருந்து இந்தியா என்றால் என்ன, அது எப்படி இருக்க வேண்டும் , எது இந்த இந்தியர்களை ஒன்றாக பிணைத்து தேசியவாத எழுச்சியை உருவாக்க முடியும் என்பதை இக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.

முதலில் மகாந்தா காந்தி, பின்னர் நேரு, அடுத்து சார்வார்கர், கடைசியில் அம்பேத்கார் தேசியவாதம்  என்று ஒவ்வொன்றும் புதிய வித்தியாசமான இந்தியாவை உங்களுக்கு காட்டும், புதிய கட்டமைப்புகளை உருவாக்கும். இக்கட்டுரையில் இந்த நான்கு தலைவர்களின் கருத்துக்கள் உங்களோடு முட்டி மோதி, எண்ணத் தெரிப்புகளை உருவாக்க வைக்கும் என்று நம்புகிறேன் 
 

 மகாத்மாவின் தேசியவாதம்:


 மகாத்மா காந்தியின் தேசியவாதம் இந்த தேச எல்லையெல்லாம் கடந்த ஒன்று. 'தேசியவாதம் என்கிற பெயரில் வலிமையான தேசியத்தை 
கட்டியெழுப்பி, பின்னர் மற்ற தேசத்தை அடிமைபடுத்திச் சுரண்டும்  தேசியவாதம் அவசியமில்லை' என்கிறார் மகாத்மா. ஒரே போடு நெற்றியில். 
    
 காந்தி வாழ்ந்த காலம் என்பது தேசியங்கள் உடைந்தும், பிரிந்தும், சேர்ந்த வண்ணம் இருந்த காலம். அந்த நேரத்தில் கூட , எக்காரணம் கொண்டும் தன் மதிப்பீடுளை சிறிதளவு கூட குறைக்காது எடுத்து எடுத்து வைக்கிறார். 'என் தேசியத்தின் மீதான பற்று இன்னோரு தேசத்து மனிதன் ஒருவனை காயப்படுத்த கூடாது' என்கிறார். காந்தியின் கீழ் காணும் வரிகள் இன்றும் வாசிக்கும் போது ஒரு வித அச்சத்தை தருபவை. ஒரு  அரசியல்வாதிக்குள் இத்தனை பேரன்பா , பரந்த உள்ளமா என ஆச்சரியபட வைக்கும்.  அதுவே  அவர் மகாத்மா என்பதை மீண்டும் நிறுவும்.

" பொதுவாக தேசியவாதங்கள், தேசத்திற்காக ஒரு தனி மனிதன் தன் குடும்பத்தை இழக்கலாம் என்கின்றன. ஆனால் என்னை பொறுத்த வரை இந்த உலகம் 
மனிதாபிமானத்துக்காக ஒரு  தேசத்தை கூட இழக்கலாம் " என்கிறார். இந்தியாவை ஒரு புண்ணிய பூமி , இந்த உலகு இந்தியா மூலமே ரட்சிக்கப்பட முடியும். அதற்கான எல்லா தகுதியும், திறனும், வரலாறும், தத்துவமும் இங்கே கொட்டிக் கிடக்கின்றன என புகழ்கிறார்.  

ஆனாலும், அத்தகைய இந்தியாவை கட்டமைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக கவலைப்படுகிறார். 
காந்தியை பொருத்தவரை பிரிட்டிஷ்டமிருந்து நாம் பெறுவது சுதந்திரமே அல்ல, உண்மையான சுதந்திரம் ஆன்மீக சுதந்திரம்.
'ஒவ்வொரு மனிதனும் தன்னை சுதந்திரமான சிந்தனையும் செயல்பாடுகளும் கொண்ட அற்புத பிறவியாக உருவாக்கி கொள்ளும் நாளே இந்தியாவின் புதிய சுதந்திரம் ஆகும்' என்று  தெளிவுப்படுத்துகிறார். அதற்கு ஒரு திட்டமும் தருகிறார். அதுதான் சுயராஜ் (Swarajya). சுயராஜ் மூலம் எல்லா விதமான அடுக்கு மக்களையும் விழிப்புணர்வு கொள்ளச் செய்து, உலக 
நலனுக்கும், உலக ஆன்மீக விழிப்புணர்வுக்கும்
ஏற்ற மனிதர்கள் நிறைந்த பூமியாக மாற்ற வேண்டும் என்று விருப்பப்பட்டார்.  
   
'இந்தியா இங்கிலாத்தின் அடிமைத்தளைகளிடம் இருந்து மட்டுமல்ல, இன்னும் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளிடம் இருந்தும் 
விடுதலை அடைய வேண்டும் ,அதற்கு தன்னார்வ தொண்டு நோக்கத்தோடு இந்தியாவின் 
கிராமப்புறங்கள் சீரமைக்கப்பட்டு மெல்ல மெல்ல தனி 
மனித விடுதலையையும், இந்த தேசத்து 
விடுதலையையும் அடைய வேண்டும்' என்கிறார். சுய ராஜ்ஜியமே பூரண தேச விடுதலை.  இதை அகிம்சை வழியில் அடைந்து இந்த உலக தேசத்திற்கு வழிக்காட்டியாக இந்தியா இருக்கும் என நம்பினார். 
   
பாதி வாசிக்கும் போதே தெரிந்திருக்குமே... இதுக்கும் இன்றைய நிலைக்கும் சம்பந்தமே இல்லையென.

வீர்சார்வார்கர்  தேசியவாதம்:

காந்தியின் இந்தியாவானது அடைய முடியாத நிலையான utopian  சிந்தனையென்றால், அடுத்து வருவது ஹாலிவூட் மசாலா படம். இதோ சார்வார்கரின் தேசியவாத கதையின் மிகச் சுருக்கம். 

எகிப்திய நாகரீக காலத்துக்கும் , பாபிலோனிய நாகரீகத்துக்கும் முன்பு, அந்த காலம் எந்த காலம் என சொல்ல முடியாத ஒரு காலத்தில், ஆரியர்கள் எனும் இனம், அவர்களின் இருப்பிடமாயிருந்த 
பாரசிகத்தை விட்டு, சிந்து நதிகரையோரம் குடி புகுந்து, வேத மந்திர ஸ்லோகங்களையும், அக்னி 
குண்டங்களையும் வளர்க்க ஆரம்பித்தார்கள். ( அடுத்து எங்காச்சும் ஹெச். ராஜா ஆரியர்கள் வருகை கட்டுக்கதையென்றால் - உங்க தலைவர் சார்வார்கரும் கட்டு கதையதான் விட்டாரான்னு கேட்கனும், ஒகே வா) 
     
சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்ததால் இவர்கள் 'சிந்து' என்று அழைக்கப்பட்டார்கள் பின்னர் மருவி 'இந்து' என அழைப்பட்டார்கள். அவர்கள்  மெல்ல மெல்ல  இந்திய  துணை கண்டத்தை நோக்கி வந்தார்கள். ஏற்கனவே அங்கிருந்த வித்யாதாரர்கள், அப்சராக்கள், யக்சர்கள், ராட்சஷர்கள்,காந்தர்வர்கள்,கின்னாரர்கள் 
போன்றவர்களோடு நட்பாய் பழகி மெல்ல அவர்களோடு கலந்தனர்.ஆரியர்கள் மெல்ல பலுகிப் பெருகினார்கள். 
   
ஒரு வலிமை மிக்க தேசம் 
ஒன்றை உருவாக்கும் கனவு 
அவர்களை இந்த தேசத்தின் தென்பகுதி வரை  அழைத்துச் சென்றது.  இலங்கை தீவு வரை தங்கள் வெற்றியை நிலை நாட்டினார்கள். இலங்கையை வென்று தன் தலைநகரான அயோத்திக்கு ராமர் 
திரும்பிய அந்த தினத்தில்தான் இந்த  தேசம் முழுமையானது. 
           
ஶ்ரீராமரின் ஆரிய ரத்த சொந்தங்கள் மட்டுமின்றி தெற்கில் வாழ்ந்த அனுமன், சுக்ரிவன், விபீஷணன் போன்றோர் கலந்து கொண்ட ராமரின் பட்டாபிஷேகம்தான் இந்த தேசத்தின் முக்கிய நாள். ஆரியர்களும், ஆரியர் 
அல்லாதவர்களும் ஒன்றோடு ஒன்றாய் பிணைந்து உருவாக்கிய இந்தியா பிறந்த நாள் அது. இந்த பிணைப்பிலேயே இந்த தேசம் இன்று வரை பிணைந்தும்  கிடக்கிறது. ( அப்பிடியே ஜெயமோகனின் விஷ்னுபுரம் மாதிரி.)
     
ஶ்ரீராமர் ஆட்சியில் 
இணைத்து வைக்கப்பட்டது  இந்த நிலபரப்பு. அந்த நிலபரப்பில் தோன்றிய எல்லா தர்மங்கள், தத்துவங்கள்,கலாச்சாரங்கள், நாகரீகங்கள் போன்றவற்றை நம்புகிறவர்களும், அதை கடைப்பிடிக்கிற அனைவரும் இந்து இனம், அந்த இனமே இந்தியர்கள். இவர்களுக்கு மட்டுமே இந்தியா சொந்தம். 
   
 வாழ்வது யாராக இருந்தாலும் ஆள்வது நாங்கள் - இதான் அடிப்படை. 
 இது என்னப்பா காமெடி கதையால்லா இருக்குன்னு நீங்க நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். சார்வார்கர், இந்து என்பது மதமல்ல, அது ஒரு தத்துவ பாரம்பரியம் அல்லது கலாச்சாரம் ( sanscruti) என சொல்லி , எது இந்து? , யார் இந்தியன்? எதுவெல்லாம் இந்துத்துவம்? என்பதை நமக்கு புரிய வைக்கும் நேக்கு இருக்கு பாருங்க .அது காம்பெஸ் இல்லாமல் போட்ட வட்டம் மாதிரி தெளிவில்லாமல் சீரற்று இருப்பதாக தோன்றும். ஆனால் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தேசியவாதம் இதுவாகத்தான் இருக்க போகிறது என்பது என் யூகம். இதுதான் பாட திட்டத்திலும் வரும். அதில் சார்வார்கர் இறை தூதனாக பார்க்கப்படுவார். இதுதான் இந்து தேசியவாதக் கதை. படம் சூப்பர் ஹிட்டாகி இன்று நாடெங்கும் ஓடிக் கொண்டிருப்பது சோக கிளைகதை. 

 நேருவின் தேசியவாதம்:

கடந்த இரண்டு தேசியவாதங்களை விடவும் நம் மனதுக்கு நெருக்கமானதாக இது இருக்கும். இதில் எதையும் உங்களால் மறுக்க முடியாது. 
    
நேருவின் பார்வையில் இந்தியா என்பது பன்முக தன்மை கொண்ட தனித்துவமான நாடு. 'பல்வேறு விதமான கனவுகளையும், கருத்துக்களையும், கலாச்சாரங்களையும் பல்வேறு காலங்களில் அழித்து, அதன் மீது புதிய புதிய கனவுகளும் கலாசாரங்களும் அடுக்கடுக்காக எழுதப்பட்டாலும், அழிக்கப்பட்டவைகள் எதுவும் முழுமையாக அழிந்துவிடாமல், எச்சமாக மிச்சமாக நம்முள் இன்றும், நமக்கு தெரியாமலே நம்மோடு இருக்கிறது' என்கிறார் நேரு. 
  
நேருவும் இந்தியா மிக புராதனமானது என்பதை நம்புகிறார். நாகரிகத்தின் உச்சம் இந்தியா என சிந்து சமவெளி நாகரீகத்தை சுட்டிக் காட்டுகிறார். சார்வார்கர் போல ஆரியர்களின் வருகை, அவர்கள் திராவிடர்களோடு கலந்தது போன்றவற்றை சரித்திரபூர்வமானது என  எடுத்து நம் முன் வைக்கிறார். 
     
இந்தியாவின் வேத மரபுகள், தன்னையும் இந்த உலகத்தையும் ஞானமாய் அணுகிய அறிவாற்றல், மொழி கலாச்சார கலப்பு,மகாவீரரும் , புத்தரும் உலகுக்கு கொடுத்த தரிசனங்கள், வேதங்களும் உபநிடங்களும், இன்னும் இந்தியாவிடமிருந்து பிரித்து எடுக்க முடியாத பன்முக தன்மை, பல்வேறு வகை மனிதர்கள், உயிரினங்கள் என பண்டைய புகழும் வளமும் கொண்டது இந்தியா என் நம்புகிறார். 
          
இந்த இந்தியாவை  ஏதோ ஒரு சக்தி பிணைத்திருக்கிறது எனச் சொல்ல முடியும் , அது அவர்கள் வாழும் மண் மீது உள்ள மரியாதை என்றும் சொல்லும் நேருக்கு unity  in diversity தான் இந்தியா. ஏதோ ஒரு சக்தி இந்த பன்முக தன்மை கொண்ட, கலாசார கலவை கொண்ட, பல்வேறு சமூகங்களை இணைத்து இறுக்கி கட்டியுள்ளது என்பது நேருவின் அடிப்படை புரிதல்.
   
இது வரை வாசித்தது ஒன்னும் புதுசா இல்லையோ? எல்லாம் கேட்ட கதையா இருக்கேன்னு நினைச்சா, ஆமாம் கரைக்ட் .. இது தான் நாமும் நம் குழந்தைகளும் பள்ளியில் படித்தது .. படிப்பது. 
நேருவின் கருத்தும், அப்பொழுது வாழ்ந்த மேட்டுக்குடி அறிவாளிகளின் கருத்தும் இதுவாகவே இருந்திருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். Left liberal thought னு சொல்லுவாங்க. 
      
இந்த தேசியவாதம் மெல்ல மெல்ல தன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது .. என்பது கலக்கமாக கூட இருக்கும். 

அடுத்து அம்பேத்கர்... 
 அதற்கு முன் முக்கியமான மேட்டர் ஒன்னு, நான் இந்த தலைவர்களின் தேசியவாத கருத்துக்களை படிக்கும் பொழுது முக்கியமான விஷயம் ஒன்று புரிந்தது. அதாவது எல்லா தலைவர்களுக்கும் இந்தியா பாகிஸ்தான் பிரிவு அவர்களுக்குள் ஒருவித பதட்டத்தையே உருவாக்கி இருந்திருக்கிறது. பாகிஸ்தான் பிரிவுக்கு எந்த முறையான காரணத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து அடுத்து இதே போல் ஒவ்வொரு குழுவாய் பிரிந்து விடுவார்களோ என்கிற பயமும் இருந்ததாக எனக்கு தோன்றியது ... அந்த பயம் அவர்களின் தேசியவாத கருத்திலும் பிரதிபலித்தது என்றும் சொல்ல முடியும் . 
     
ஆனால் அம்பேத்கர் மட்டும் மிகத் தெளிவாக எந்த குழப்பமும் இன்றி தன் கருத்தை ஒரு நீதியரசர் போல அராய்ந்து சொல்லிருப்பது எனக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது.

அம்பேத்கரின் தேசியவாதம்: 

அம்பேத்கரை வாசிக்கும் பொழுது கிட்டதட்ட கடந்த மூன்று தேசியவாதங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும்  உள்ள  முரண்பாடுகளுக்கு  பதில் கிடைத்தது போல இருந்தது. 
         
அம்பேத்கரும் நேரு போல இந்திய இனத்தை கலப்பின இனம் என்கிறார் . அடுத்து, "இந்து எனும் பெயர் இந்த நிலபரப்பில் வாழும்  மனிதர்களை குறிக்க முகமதியர்கள் வைத்த பெயரே. இந்து என்கிற பெயர் எந்த சமஸ்கிருத படைப்பிலும் பார்க்க முடியாது" எனச் சொல்கிறார். 
      
இதெல்லாம் கிட்டதட்ட நேரு மற்றும் சார்வார்கர் போலதான். ஆனால் அடுத்த வரியில் இதுவரை நம்பியிருந்த அனைத்தையும் கலைத்து போடுகிறார் பாருங்கள். "இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்த நிலப்பரப்பில் வாழ்கிறவர்கள் அவர்களுக்கென தனியாக, தனித்துவமாக தங்களுக்கு பெயர் வேண்டும் என்று கூட எண்ணவில்லை. அப்படியான சமுதாய உணர்வோடு அவர்கள் என்றும் வாழ்ந்ததே இல்லை "என்கிறார்.
       
இந்திய சமுதாயம் பல்வேறு சாதிகளின் கூட்டமைப்பு, அவ்வளவுதான். சமுதாயம் மற்றும் தேசம் போன்றவற்றை பற்றி பேசும் அம்பேத்கர் உணர்ச்சி வசப்பட்டு கதையளக்காது, தன் சாதி, தன் மதம், தன் மாநிலத்தை முன்னிறுத்தி சொந்தம் கொண்டாடும் விதமாய் கதைவிடாமல்,   மனித உளவியலை புரிந்து, அறிவியல் துணையோடு தீர்க்கமாக அனுகுகிறார். அவரை பொறுத்தவரை, இந்து சமுதாயம் பல சாதிகளால் ஆனது. அதுவும் Amorphous society என்கிறார் . அதாவது எந்த வித தெளிவான, ஸ்திரமான இணைப்புகள் இல்லாத சமுதாயமாக இருக்கிறது என்கிறார். 
       
தேசிய உணர்வு கொண்டு வாழ முதலில் சமுதாய உணர்வோடு வாழ்தல் வேண்டும் என மிக அடிப்படையிலிருந்து தேசியத்தை குறித்து தன் விமர்சனத்தை முன் வைக்கிறார். அருகருகே வசிப்பதால் மட்டும் சமுதாய உணர்வோடு இருப்பதாக அரத்தமில்லை. 
அது போலவே ஒரே பழக்க வழக்கம், ஒரே நம்பிக்கைகள் மற்றும் சிந்தனையோடு இருக்கும் குழுக்கள் சமுதாயங்களாக  மாறிவிடாது. மனிதர்களிடைடே ஒரே மாதிரியான கூறுகள் இருப்பதால் மட்டும்  மனிதர்கள் சமுதாயமாக வாழ்கிறார்கள் என அர்த்தமில்லை என சொல்லும் பொழுது நேரு, காந்தி , வீர்சார்வாகர் கட்டிய அனைத்து மாயாவாத மேஜிக் கூறுகளை சுலபமாக அம்பேத்கர் மறுப்பது இலகுவாக நமக்கு புரிகிறது. 

அம்பேத்கரை பொறுத்தவரை 
"மனிதர்கள் தங்களுக்குள் பொதுவான கூறுகளை பகிர்ந்து வாழ்ந்தால் மட்டுமே அவர்கள் சமுதாயமாக வாழ்கிறார்கள் என அர்த்தம்". அவர்களுக்கு இடையில் நடக்கும்  பரிவர்த்தனைகளே இந்த பொதுவான கூறுகளை கட்டமைக்கும், அதுவே சமுதாய உணர்வை உருவாக்கும் என்பது அம்பேத்கரின் சிந்தனை. 
     
செத்தாலும், ஜெயித்தாலும், கூடி தின்னாலும், ஒரே சாதிக்குள்ளேதான் நடக்கும். மேலும் அவர்களுக்குள்ளே திருமணம் செய்து கொள்வார்கள் . 
கொடுக்கல் வாங்கல் எல்லாமே அதே சாதிக்குள்தான். சாதிக்கு என கோவில் , குளிப்பிடம், கூடுமிடம் என எல்லா சாதிகளும் அவர்களுக்குளேயே உலகை தீர்மானித்துக் கொள்கிறார்கள் என்கிறார். 
      
என் மொழிபெயர்ப்பில் அம்பேத்கரின் இந்த கருத்து காணாமல் போய்விட கூடாது என்பதால் .. அவரின் வார்த்தைகளையே இங்கு தருகிறேன் 
"Men constitute a society because they have things which they possess in common. To have similar things is totally different from possessing things in common. And the only way by which men can come to possess things in common with one another is by being in communication with one another. This is merely another way of saying that Society continues to exist by communication—indeed, in communication. To make it concrete, it is not enough if men act in a way which agrees with the acts of others. Parallel activity, even if similar, is not sufficient to bind men into a society." 
     
இந்த பரிவர்த்தனைகள் நடக்க கூடிய எல்லா வாய்ப்புகளையும் இந்தியாவில் சாதி என்கிற ஒன்று தடுத்து விடுகிறது என்கிறார் அம்பேத்கர். 
இந்துவின் தேசிய உணர்வுக்கு  சாதி தடை . அதைப் போல முஸ்லிம்களுக்கு அவர்கள் மதம்!!! இந்துக்களின் சாதி வெறிக்கு நேர் நிகரா, முஸ்லிம்கள் குருட்டுத்தனமாக பின்பற்றும் மத கொள்கைகளை சாடுகிறார் அம்பேத்கர். குழந்தைகள் திருமணம், முஸ்லிம்களின் விவாகரத்து முறை, பெண்களின் நிலை , இந்துக்கள் அளவு இல்லையென்றாலும் முஸ்லிம்களிடமும் காணப்படும் சாதி வேறுபாடுகள். மதம் சார்ந்த சமுதாய கூட்டணி , மதத்தை மட்டும் முன்னிறுத்தி  செய்யும் அரசியல் ,  இஸ்லாமில் இருக்கும்  அடிமைத்தனம் போன்றவற்றை சாடுகிறார். இத்தகைய சமுதாய சீர்கேடுகள் இருந்தும் அதை அகற்றக் கூடிய எந்த இயக்கமோ, அதற்கான செயல்பாடுகளோ அவர்களிடம் இல்லை என்பதே மிக கவலை அளிப்பதாக இருக்கிறது என்கிறார்.
       
குறிப்பாக இந்த தேசம் தாண்டிய அவர்களது மதக் காதலை தெளிவாக கண்டிக்கிறார். ( கிலாபத் இயக்கம்).மேலும் இந்திய முஸ்லிம்கள் தங்களை இந்துக்கள் ஆக்கிரமித்து விடுவார்களோ என்கிற பயம் அவர்களை மாற விடாது வைத்திருக்கிறது என்றும் ஆதாரபூர்வமாக நிறுவுகிறார்.
         
அம்பேத்கரின் மிக நேர்மையான, பகட்டற்ற பகுத்தறிவை வாசிக்கும் பொழுது முழுமையான தேச அபிமானமாக எனக்கு படுகிறது .  அவரின் தேசியவாத கருத்தை இந்தியாவின் தேசிய கொள்கையாக்கிருந்தால், ஐரோப்பிய நாட்டுக்கு இணையாக இன்று நாம் இருந்திருந்திருப்போம் என்பது உண்மையான உண்மை. நோ டவுட்.

முடிவுரை: 

 இது வரை நாம் பார்த்த நான்கு தலைவர்களின் கருத்தை உற்று நோக்கினால் ஒரு பொதுதன்மை தெரியும். குறிப்பாக காந்தி, நேரு மற்றும் சார்வர்கரின் கருத்துகள், இந்த தேசம் ஏதோ ஒன்றால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவது போலவும், அம்பேத்காரின் கருத்து அதை உடைப்பதாகவும் அல்லது அதற்கு முக்கியத்துவம் அளிக்காததையும் பார்க்கலாம் . 
             
'இந்தியர்களிடம் இருப்பது தேசபற்றே அல்ல, அவர்களுக்கு இருப்பதெல்லாம் சாதி பற்றும், மத பற்றும் மட்டுமே. தீண்டாமை மட்டும் இந்த தேசத்தில் எல்லா இடத்திலும் பொதுவா இருக்கிறது' என்கிறார் அம்பேத்கர்- மறுக்கவே முடியாது. 
      
அவர்களின் பன்முக கலாசாரங்கள் கூட, தங்கள் சாதியின் பழக்கவழக்கம் ,  உடை , அலங்காரம், சடங்கு முறை என எல்லாவற்றிலும் அடுத்த சாதியை காட்டிலும் வேறுபடுத்திக் காட்ட முயன்றதால் வந்த விளைவே என்கிறார். ( செம இல்ல!!!!) - நேருவின் பன்முக பார்வையில் இருந்தது ரோமாண்டிஸமோன்னு இது யோசிக்க வைக்குது. 
   
சாதி, கூட்டு சமுதாய உணர்வை அழித்தொழிக்கிறது.
சாதி ,பொது சேவையை தடுக்கிறது. 
சாதி ,மனிதர்களின் நேர்மையையும், அவர்களின் விசுவாசத்தையும் அவன் சாதிக்கு மட்டுமே உரித்தாக்கி வாழ வைக்கிறது. அப்படித்தான் இப்பொழுதும் இருப்பதாக நானும் ஒத்துக் கொள்கிறேன். 

கிலாபத் இயக்கத்தை முஸ்லிம் லீக் முன்னெடுத்து போவதை, முஸ்லிம்களின் தேச எல்லை தாண்டிய மத உணர்வை, காந்தி போன்றோர் அரசியலாக்குவதை , இந்து மகாசபையின் செயல்பாடுகளையும், மிக நேர்மையுடன் விமர்சனம் செய்கிறவர் அம்பேத்கார் மட்டுமே என தெளிவாக தெரிகிறது .மேலும் காந்தியின் மிக உயர்ந்த உண்ணத கருத்துகளை அடைய வேண்டுமெனில் அது அம்பேதகரின் சிந்தனைகளை நடைமுறைபடுத்துவதால் மட்டுமே அடைய முடியும் எனவும் தோன்றுகிறது. அப்படி செய்திருந்தால்,
இன்று போல மதம் இந்த நாட்டின் அரசியலாக இருந்திருக்காது - மனித மாண்பும் உழைப்பும் அரசியலாகியிருக்கும்!!! 
 
 "Liberty, Equality and Fraternity -  இதுவே தனது கொள்கை, இதுவே இந்த  தேசத்தின் கொள்கையும் கூட... 
1. Fraternity  - புரிந்துணர்வு
2. Equality  - சமத்துவம்
3. Liberty - விடுதலை
 
இதுவே தன் கொள்கைகள்" என அறிவிக்கும் அம்பேத்கர் "இதெல்லாம் பிரான்சில் இருந்து எடுக்கப்பட்டவை என யோசிக்காதீர்கள்  இவை அனைத்தும் புத்தரின் ஞானத்திலிருந்து  புரிந்து கொண்டது" என ஒரே வரியில் வீர்சார்வார்கரின் இந்து தேசியவாதத்தை ஆட்டம் காட்டுகிறார். 
       
இந்த Fraternity  - புரிந்துணர்வு, சமத்துவம், விடுதலை கூட இயற்கையில் கிடையாது, எல்லாம் கற்பனையே , இவைகள் கதையாடலே ... ஒரு வகையான மித் , ஆனால் இதை நம்பும் மனிதர்கள் இந்தியாவில் இப்பொழுது கம்மி. தேசியவாதம் என்பது கூட்டாக பலரும் நம்பும் ஒரு கதையாடல் தானே.அது காலத்துக்கு ஏற்ற வகையில் மாறிக்கொண்டே தான் இருக்கும். பிரபலமாக இருக்கும் கதையாடலை தோற்கடிக்க அதை விட இன்னோரு வலிமையான கதையாடல் அவசியம்.. வலிமை என்பது கதையாடலில் இல்லை அதை எவ்வளவு காலம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறோம் என்பதில் இருக்கிறது. 
    
இதைதான் ஆர்.எஸ்.எஸ் செய்து கொண்டே இருந்தது . எத்தனை தேர்தல்கள்!  எத்தனை தடை உத்தரவுகள். ஆனாலும் மனம் தளராது சார்வார்கரின் கதையாடலை உயிரோடு வைத்திருந்தார்கள். 

காந்தியின் utopian தேசியம் , நேருவின் மேஜிக்கல் தேசியம், 
வீர்சார்வர்கரின் ஜூராசிக் தேசியத்திற்கு
மத்தியில், இந்த இந்திய நாட்டின் நன்மைக்கும், அதன் வளர்ச்சிக்கும், உண்மையான தேசியத்திற்கும், வளமான வலிமையான ஆண்மையான தேசத்திற்கும் ஏற்ற கொள்கை அம்பேத்கருடைய கொள்கை என்றே தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம்.
அட்லீஸ்ட்...


ஜெய் பீம்!! 
நீல் சலாம்!! 

Notes from : 
*Discovery of India - Nehru. 
*Gandhi concept of swaraj by Dr P.P. Singh
*India my dream - MK .Gandhi
*Pakistan or the partition of India - by Ambadkar
*Essential of Hindutva - V.D Sarvarkar
*Cast prevented Hindus from forming a real society or nation - Dr Ambedkar 
*Hindutva- exploring the idea of Hindu nationalism- Jyotirmaya Sharma.
*Pakistan and the malaise - Dr Ambedkar

முற்றும்.

12 comments:

  1. மிகவும் அருமையான கட்டுரை நிர்மல்.என் போன்றவர்களும் புரிந்து கொள்ளக்கூடிய எளிய நடை...சூப்பர்....iam sharing it

    ReplyDelete
  2. Well written Mr. Nirmal....superb...

    ReplyDelete
  3. காலத்திற்கேற்ற அருமையான கட்டுரை...

    ReplyDelete
  4. Good one Nirmal, but what'll be the action. If I take this conversation to my fellow people.. I have to face lot of questions. Onna vazntha thesiyam illa, kuduthutu vanganumnu solreenga.. Bunnu lernthu Ponnu varaikum.. Namma kids generation layathu maarumaa, viduvangala.. Mch

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் பொதுவான கற்பனை எது? Liberty freedom and fratanity போன்ற கற்பனைகளை நோக்கி செல்ல அந்த கதையாடலை தைரியமாக சொல்லிகிட்டே இருப்போம்.

      Delete
  5. Nirmal, enga theruvula irkarathu 10 veedu.. Engalala othumaya iruka mudiala, even all are Hindus (sindhus), periare ipoo irundha kooda.. Kozapivitrvanungaloo BJP aalunga..chancellaa.. Unmai marakum but aziyaathu

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இந்த நம்பிக்கை அழிய போக போகுதுன்னு நம்பிக்கை வந்துட்டா கூட்டம் கூடிரும்.

      Delete
  6. Nirmal, one small request, intha jallikattu protest nadanthuchulla,athula avaloo per participate panathukaana psychological reason ennanga? Please explain. Ur vision is nearing or leads to think about truth.. By arathu fan vinothu

    ReplyDelete
    Replies
    1. தமிழ் அடையாளம் எதுன்னு யாருக்கும் தெரியாது ஆனா எதோ சிலவற்றை நாமளா கற்பனை செய்து கொண்டிருக்கிறோம்... இது ஒரு மித்.
      இந்த மித் அல்லது கற்பனையை நம்பும் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை என ஜல்லிகட்டு போராட்டம் மூலம் தெரியுது.
      Irrational க்கு மட்டுமே ஜன திரள் கூடும். சரித்திரம் முழுக்க அப்படித்தான் இருக்கு.
      சோத்துக்கு சண்டை போட்டு செத்ததை விட பெருமைக்கும் தான் நம்பும் நம்பிக்கைக்கு செத்தவன் அதிகம்.

      Delete
    2. //கற்பனையை நம்பும் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை என ஜல்லிகட்டு போராட்டம் மூலம் தெரியுது. //
      முற்றிலும் உண்மை. மாட்டை துரத்தி வீரம் காட்டுவதை தடை செய்யபட்டதிற்கு எதிராக மெரினாவில் ஜாலியாக கூடியதை, உலகத்திற்கே வழிகாட்டும் ஜல்லிகட்டு புரட்சி என்று நம்பும் அளவிற்கு உள்ளது.

      Delete
  7. மே மாதம் வந்த பதிவு. இன்று தான் கண்டேன்.அருமையான பதிவு.

    ReplyDelete