Friday, September 13, 2013

ஆற்று வெள்ளத்தில் சிறு சாகசம்

ஆற்று வெள்ளத்தில் சிறு சாகசம் 

         ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுதுடே, பேருந்தெல்லாம் நிப்பாட்டிடானுவ, பாலத்த தாண்டி தண்ணீர் ஓடுது, நம்வூருக்கு வரனும்னா ஆத்தூரை சுத்தித்தா வரனும் தெரியும்லா என்றான் தர்மா,  நிர்மல்  வெள்ளம் பார்க்க வாரியா? நம்மவூர் ஆள்கள் எல்லாம் அங்கேதான் இருக்காவ என்றான், ஊரில் வெள்ளம் வந்தால் ஊரே ஆற்றுக்கு வந்து வேடிக்கை பார்க்கும், மெதுவாக தவழ்ந்து போகும் ஆறு சீற்றத்துடன் இரைச்சலோடும் ஒடிவதை பார்ப்பது அலாதிதானே,  எங்க ஊர் பாலம் தாழ்வான பாலமாக இருந்ததால் ( படத்தை பார்க்கவும்), வெள்ளம் வரும் காலத்தில் அதை தாண்டி தாமிரபரணி படையெடுத்து செல்லும்.
        நானும் தர்மாவும் பாலத்தின் அருகில் சென்றோம். எற்க்கெனவே இம்மி, கீனா, சுதாகர் என ஊர் பட்டாளங்கள் அங்கே இருந்து ஏதையோ பற்றி மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர். நானும் கலந்துக் கொண்டேன், ஏ யாரெல்லாம் வர்றா,  நிர்மல் நீ வாரியா? சொல்லு டக்குன்னு போய்ட்டு வரனும், சாயங்காலம் ஆகிட்டே இருக்கு. எங்கே எதுக்கு? என நான் கேட்க்க. தம்பி இங்க பாரு இந்த சின்ன பைய, என அருகில் பள்ளிக் கூட பையோடு  நின்றுகொண்டிருந்த பையனை காட்டினார். இவன் ஊரு ராஜபதி, பாலத்துக்கு அந்த பக்கத்துக் கிராமம், காலையிலெ பள்ளிக்கூடம் வந்திருக்கா, நடந்தே வந்திருக்கான், வரும்போது வெள்ளம் இல்லை, இப்ப பாலத்துக்கு மேல தண்ணி, அதான் அவனை அந்தப் பக்கம் கொண்டு விடலாம்னு இருக்கோம். பாவம்லா இந்த பைய, அவிய அம்மா அப்பா தேடுவாவ்ல்லா என்னடே சொல்ற என்றார், திரு திருவென முழித்து கொண்டிருந்தான் அந்த பையன்.
         அண்ணே தண்ணி இழுப்பா இருக்கும் போலேயே, ஆமாம் தம்பி, நீ வரலனா விட்று, நாங்க போறோம், என்னடே சொல்றிய என்றார்,  கூட்டம் ஆமாம் போவேம்டே, ஆறுலயும் சாவு அறுபதிலையும் சாவு என்றது கூட்டம். நானும் ஏதோ தைரியத்தில் இம்மி அண்ண. என்னது வர்லனா வீட்றா அதெப்படி, நானும் வர்றேன், என்றேன், அப்ப சரி. வாங்கடே கிளம்புவோம். காலிலிருந்த செருப்புகளை கழட்டி ஒரத்தில போட்டு எலே இந்த செருப்புகளை பாத்துக்க என்று எந்த வித முன்னேற்பாடும் இன்றி, பழக்கமும் இன்றி, யாரிடமும் சொல்லாது, எட்டு பேர் கொண்ட அந்த குழு சிறுவனோடும் சேர்ந்து கிளம்பியது.
     இம்மி அண்ணனுக்கு தண்ணீர் முழங்கால் கீழ் வரை இருந்தது, எனக்கு தொடை வரை, அந்த சிறுவனுக்கு இடுப்பு வரை. சுதாகர் அண்ணனும் இம்மி அண்ணனும் அந்த சிறுவனை அவர்களுக்கு இடையில் வைத்துக்கொண்டார்கள், அதன் பின் கீனா அப்புறம் நாணு எனுக்கு அப்புறம் தர்மா என  அவர்களுக்கு பின்னால் சென்றோம்.


     ஏலே எல்லோரும் ஓன்னா கை கோர்த்து போவோம், அப்பத்தான்  தண்ணி இழுவைய எதிர்த்து போக முடியும், புரியுதா. தண்ணியில எதிர்த்து போகும் போது நேரா நிக்கப்புடாதுல, அந்த நாணல் இருக்கு பாரு அது மாறி வளஞ்சி போகனும், கோனாலா உடம்ப வச்சி சைடா நடக்கனும், என்ன மாறியே பின்னால வாங்க, புரியுதா, அப்புறம் சப்புல சலபுலன்னு  சப்பாத்து போட்ட போலிஸ்க்காரன் மாறி வீறாப்பா நடக்கபுடாது, தரையை ஒட்டி கால வச்சிக்கிட்டு இழுத்து இழுத்து நடக்கனும் என்றார், சரின்னே என தலையாட்டினோம். ஒரு துளி பயம் இல்லை. ஆற்றின் வெள்ளம் நீர் அழுக்கு, மணல் குப்பை எல்லாவற்றையும் கரைத்து தங்க நிறத்தில் வேகமாக ஓடி, பாலத்தின் துளைகள் வழியாக அந்த புறம் சென்று முட்டி மோதி பெரும் சத்தத்தோடு சென்று கொண்டிருந்தது, இரு புறமும் தண்ணீர் எங்கும் தண்ணீர், வலது புறத்தில் கொப்பு, செடி, கொடிகள், சருகு, மூள் வேலி, அமலை செடிகள் என அடித்து கொண்டு வரும் தண்ணீர் பார்க்க  தங்க நிறத்தில் அமைதியாகவும் வேகமாகவும் வருவது போல இருக்கிறது,  ஆனால் பாலத்தை கடந்து செல்லும் போதுதான் அதன் வீரியமெம்ல்லாம் தெரிகிறது, அதன் சத்தம் ஓஓஓஓஓஓ என வெகு தொலைவில் கூட கேட்க்கக் கூடியதாக இருந்தது, தண்ணீரின் முழு வேகத்தோடு துள்ளித் தெறிக்கிறது, அதன் போக்கு பிடிபடாதது போல தாறுமாறா ஓடிற்று. எலே வலபக்காமா ஓரமா வாங்க, அந்த பக்கம் போக கூடாது என எச்சரித்து கொண்டே சென்றார் இம்மி அண்ணன்.

  

                பாலத்தில் எங்களுக்கு இருந்த ஒரே பிடிமானம் பாலத்தில் அமைந்த தடுப்பு தூண், அது 10 மீட்டருக்கு ஒன்றாக இரு புறமும் இருக்கும். முன்னால் சென்று இம்மி ஒரு தூணை பிடித்து கொள்வார், அவரோடு அந்த சிறுவனையும் பிடித்துக்கொள்வார், பின்னர் அவரது கைகளை சமாளி அண்ணன், அப்புறம் கீணா அப்புறம் நாணு எனக்கெப்புறம் மற்றவர்கள், கடைசியில் குழந்த அண்ணன். சங்கிலியின் இரு முனைகளிலும் பலசாலிகள் வயதில் மூத்தவர்கள், நாங்கள் அவர்களை இணைக்கும் சங்கிலி தொடர்கள். இவ்வாறு எல்லோரும் ஒரு தூணை அடைந்ததும் அடுத்த தூணை நோக்கி செல்வார் இம்மி அதுவரை அவரை சங்கிலி தொடர் போல நாங்கள் பிடித்து கொண்டு நகர்வோம், இந்த தடுப்பு தூண்களை யாராவது ஒருவர் பிடித்திருப்பார்கள், அதுதான் இந்த சாகசத்தின் சூட்சுமம் என அப்போது விளங்கிற்று, ஆற்றின் நடுவில் ஆற்றின் இழுப்பு மிக மிகுதியாக இருப்பதாகவே இருந்தது, இருந்தாலும், இனி பின் நோக்கி செல்லுவது சரியான முடிவாக இருக்காது என கருதி சென்று கொண்டிருந்தோம்.

              

   இம்மி அங்கிருந்து கொண்டு உயர்ந்த ஆலையத்தின் கோபுரத்தை பார்த்து சிலுவை போட்டுக்கொண்டார். எல்லோரும் முழு பலத்தையும் வீரியத்தைம் கொண்டு நடந்தோம், ஏதோ சாமி வந்து ஆடும் நிலையில் இருந்தோம் என இப்போது நினைக்க தோன்றுகிறது, ஆற்றின் காட்டிரச்சல் இல்லை, யாருமில்லை, எங்கிருக்கிறோம் நினைவில்லை, காலில் தண்ணீர் பட்டு தெறிக்கிற அந்த சிறு ஓசையாக சளர் சளர் என தண்ணீரை கிழித்து கொண்டு நடக்கும் எங்களது காலெடி ஒசையை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை, ஒருவரின் கைகள் இன்னொருவரின் பிடிக்குள் இன்னும் இன்னும் பலம்கொண்டு பிடித்து கொண்டோம், மூச்சி விடுகிறோமா இல்லையா என தெரியவில்லை, பயமா? வெறியா? குருட்டு தைரியமா? சொல்ல தெரியவில்லை. மெதுவாக, உறுதியாக முன்னேறி அடுத்த கரையை அடைந்து, அந்த சிறுவனை அவன் கிராமத்தில் விட்டுவிட்டு மீண்டும் ஆற்றை கடந்து வந்தோம்,  சிறுவனின் ஊருக்கு செல்லும்போழுதுதான் எனக்கு மிக கஸ்டமாக இருந்தது, காலில் செருப்பு இல்லை, சரியான ரோடு இல்லை, இருந்து கல்லையும் முள்ளையும் பார்த்து பார்த்து நடந்து சென்றோம். மீண்டும் ஆற்றை கடந்து வரும் பொழுது எளிதாக இருந்தாக எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள், ஒரே சிரிப்பாக சிரித்து கொண்டு வந்ததாக நினைவு,  கரையில் இருந்த சிலரை பார்த்து கையசைத்து “ நாங்க பரலோகத்துக்கு டிக்கெட் வாங்க போறோம்” என கத்தினோம். சில வேளைகளில் மற்றவர்களின் கைகளிலிருந்து எங்களது கைகளை விடுத்து சோதித்து கொண்டோம், சிலர் தண்ணீர் வரத்து கம்மி ஆய்ட்டுடே என்றார்கள்.  அப்படி பயம் இருக்கனும்ல்லா இந்த ஆத்துக்கு என்றான் கீனா. எனெக்கென்னவோ ஒரே அளவு தண்ணீர் வந்தது போலவே இருந்தது. எப்பாடி உயிரோடு திரும்பியாச்சி எனவெல்லாம் சிந்திக்கவே இல்லை, அப்படி ஒரு சிந்தனை இல்லையென்றுதான் சொல்லனும். Its Just a  Wild Gut அப்படின்னு இப்ப தோனுது.               இதுவரை இப்படி பாலத்தை யாரும் கடக்கலடே பஸ் கூட போகாத இந்த தண்ணிய நாம காலால கடந்திருக்கோம்டே, வாங்கல எல்லோரும் வீட்டுக்கு போவோம் என்றார் இம்மி,எல்லோரும் அவர் அவர் செருப்பை அணிந்து கொண்டு கிளம்பினோம். ரொம்ப பெருமையா இருந்திச்சி. அடுத்த நாள் பேப்பரிலெல்லாம்  நம்ம பேர் வருவது போலவும், முதல் மந்திரி, ஜனாதிபதியிடம் பதக்கம் பெறுவது போலவும், அந்த பையனின் அம்மா எங்களை புகழ்ந்து எங்கள் வீட்டுக்கெல்லாம் வந்து புகழ்கிறது மாதிரியும், பள்ளி கூடத்தில் எண்ணை முன்னிலைப் படுத்தி ப்ரின்ஸிபால் பேசுவது போலவும், அந்த பையன் பெரியவனான பிறகு கூட இதை நினைவுப்படுத்தி நன்றி சொல்லுவதுப் போலவும் போல கற்பனைகள் வந்து சென்றது எனக்கு, வீடு செல்லும் வரை யாரும் அதிகம் பேசவில்லை ஒரு வேளை எல்லோரும் இப்படியான கற்பனைகளை ரசித்து கொண்டுவந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இந்த நினைவுகளைத் தவிர வேறு எந்த வெகுமதியும் கிடைக்கவில்லை. அந்த கற்பனைகளை இப்பொழுது நினைத்தால் சிரிப்பாக வருகிறது.

       இந்த செயல் இன்று வரை எங்கள் வீட்டுக்கு தெரியாது. ப்ளிஸ் யாரும் சொல்லிறாதிய, எங்க அம்மா திட்டுவாங்க.

4 comments:

 1. ஏலே எல்லோரும் ஓன்னா கை கோர்த்து போவோம், அப்பதான் தண்ணி இழுவைய எதிர்த்தி போக முடியும், புரியுதா. தண்ணியில எதிர்த்து போகும் போது நேரா நிக்கப்புடாதுல, அந்த நாணல் இருக்கு பாரு அது மாறி வளஞ்சி போகனும், கோனாலா உடம்ப வச்சி சைடா நடக்கனும்,”

  இது போன்ற நுண் தகவல்கள் அருமையாக இருக்கின்றன. எழுத்துப் பிழைகள் மிக அதிகம். ஆற்று வெள்ளத்தில் ஒரு சாகசம் என்று க்ரிஸ்ப்பாக தலைப்பு கொடுத்து இருக்கலாம். வால் தேவையில்லை

  ReplyDelete
 2. pitchai, I have made some corrections as per your advice.

  ReplyDelete
 3. இந்த கட்டுரையை படித்தவுடன் எனக்கு என் ஊர் நியாபகம். என் ஊர் ஆத்தூர். தாமிரபரணியில் வெள்ளம் வரும் போது சின்ன பிள்ளைகளாக இருக்கும் போது பாலத்தில் மேலிருந்து வெள்ளத்தை வேடிக்கை பார்ப்போம். இப்பொழுது கொஞ்சம் மாறிவிட்டது. புதியதாக பாலம் கட்டுகின்றார்கள். எல்லாம் மாறிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவத்தை தொடர்பு படித்தியதுதென்றால் - மிக்க மகிழ்ச்சி.
   உங்கள் பிண்ணுட்டத்திற்க்கு நன்றி.

   Delete