Sunday, March 23, 2014

ஆற்றங்கரை கதை: சிலுவை பாதை

ஆற்றங்கரை கதை: சிலுவை பாதை


     இயேசு உயிர்ந்தெழும் ஞாயிறு ( ஈஸ்டருக்கு) முந்திய நாற்ப்பது நாட்களை கஸ்தி நாட்கள் என்பார்கள். பெரும்பாலும் கத்தோலிக்க கிருஸ்தவர்கள் எந்த சுப காரியங்களை வைக்க மாட்டார்கள். இந்த காலத்தின் ஒவ்வரு வெள்ளிகிழையிலும் சிலுவை பாதை என ஒன்று நடக்கும், ரொம்ப நாட்களுக்கு பிறகு நானும் சிலுவை பாதையில் கலந்து கொண்டேன். சிலுவை பாதை என்பது இயேசுவின் மரணத்தை தியானிக்கும் ஒரு நிகழ்வு. ஒவ்வரு தலமாக 14 ஸ்தலமாக இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் பற்றி தியானிப்பார்கள். சிலுவை பாதைக்கு செல்ல காரில் சென்றுக் கொண்டிருக்கும் பொழது எனது பழைய நினைவுகள் மெதுவாக எட்டி பார்த்த்து.


                          பெரியவங்க செயததை சின்ன பிள்ளைகள் செய்து பார்க்க ஆசைப்படுவார்கள். ஞானதுரைக்கும் எனக்கும் பிடிச்ச பொழுது போக்கு ஓணான் பிடிப்பதும் அதை சிலுவையில் அறைவதும்.

          ஓணான் என்றவுடன்தான் நினைவுக்கு வருகிறது. இப்பெல்லாம் ஓணான் இனம் அழிந்துவிட்டதோ? பசங்க யாரும் அதை பிடித்து விளையாடி பார்க்க முடியவில்லை. ஒருவேளை எங்கள் தலைமுறையின் மூர்க்கதனமான வேட்டையால ஓணான் இனத்தையே அழித்துவிட்டோமா? சரி கதைக்கு வருவோம். ஓணானுக்கும் யேசப்பாவுக்கும் என்ன சம்பந்தம் என தெரியல. ஆனா ஞானதுரையால் எழுதப்பட்ட சுவிஷேத்தில் சம்பந்தம் உண்டு. யேசப்பாவை சிலுவையில் அறைய கொண்டும் போகும் பொழுது தண்ணீர் கேட்டாராம். ஒரு ஓணான் மூத்திரம் கொடுத்ததாம், அதனால ஓணான் இனத்தை பழிவாங்கவே இந்த ஓணான் சிலுவை அறைதல் படலம் என்பான் அவன். நானும் அந்த அறச்சீற்றத்தில் பெருமையாகவே பங்கு கொண்டேன்.

                ஓணானை பிடிக்க நீண்ட மெல்லிய கம்பு .அதன் நுனியில் நரம்பு நூல் கொண்டு சுருக்கு முடிச்சு. எளிய கருவி. மெதுவாக சுருக்கு முடிச்சை ஓணானின் கழுத்துக்குள் நாசூக்காக விட்டு வெடுக்கென சுண்டி இழுத்தால் அது மாட்டிக் கொள்ளும். பிடித்தவுடன் வெறித்தனமாக அதன் மீது மூத்திரம் பெய்வோம். யேசப்பாவுக்கு பழிக்கு பழி. பின்னர் சிறு குச்சியில் சிலுவை செய்து, அதை படுக்க வைத்து முன்னங்காலை கையாக பாவித்து காக்கா முள்ளால் குச்சியோடு குத்துவோம். இது நடந்து கொண்டிருக்கும் பொழுது பெரும்பாலும் ஞானதுரை பாட்டி கூப்பிடுவாங்க இல்லையென்றால் எங்க அம்மா தேடி வந்திருவாங்க. அப்படியே எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடிவிடுவோம். அடுத்த முறை பார்க்கும் பொழுது நாங்க வச்ச சிலுவையின் தடமே இருக்காது, அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் அடுத்த ஓணானை தேடி சென்றுவிடுவோம்.
         இந்த ஓணான் சிலுவையில் அறையும் மேட்டர் போர் அடித்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். இந்த முறை இன்னும் புதிய நண்பர்கள் வெளியூரிலிருந்து கோடை விடுமுறைக்காக வந்திருந்தார்கள், ஞானதுரைக்கு இந்த முறை சிலுவை அறைதல் விளையாட்டில் அடுத்த கட்டத்தை சொன்னான். அதாவது அவனை சிலுவையில் அறைவது அந்த விளையாட்டு.

                          ஆலயத்தை அடைந்த பொழுது சிலுவை பாதை தொடங்கியிருந்தது ஆலய ஓலிபெருக்கியிலிருந்து வரும் ஜெபம் எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது என்கிற ஜெபமும் காதில் விழுந்தது, உள்ளே சென்று பங்கு கொண்டாலும் பழைய நினைவுகள் துரத்திற்று. அதை விட்டு வெளியே வர முடியவில்லை. ……….

             வேணாம்டா அது சரியா வராது என எல்லோரும் சொல்லி இருந்தாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு முழு தொழில் நுட்பத்துடன் வந்துவிட்டான். உயரமான கம்பு ஒன்று, சிறியதாக மற்றுமொன்று. இரண்டையும் சிலுவையாக்க சொன்னான். இரண்டையும் கட்டி சிலுவையாக்கினோம். ம்ம்ம்ம்ம்ம் இதுலேதான் என்னை நீங்க எல்லோரும் சிலுவையில் அறைய வேண்டும் என்றான். ஓணான் மேட்டரை விட இது சுவாரஸ்யமா இருப்பதை கண்டு நாங்க எல்லோரும் அவனை அந்த சிலுவையில் படுக்க வைத்து இரு கைகளை சிலுவையின் கைகளோடு சேர்த்து……….. . ஆணியால் அறைந்தோமா என உங்கள் மனம் ஆவலோடு கேட்பது இங்குவரை கேட்கிறது. கட்டினோம். கால்களை ஒன்றாக்கி கட்டினோம். சரி சிலுவையோடு என்னை தூக்கி நடுங்கள் என்றான் ஞானதுரை. எல்லோரும் சேர்ந்து தூக்கினோம்,
       யேய் பிடில.
      அந்த பக்கம் பிடில.
     நால்லாம் பிடிச்சிருக்கேன்,
      எல அங்க சாயுது.
    இல்ல இங்க சாயுது
   ஏய் ஏய் பிடி பிடி………
                     பிடிமானம் பாரம் தாங்காது சிலுவையோடு முஞ்சி தரையில் அடிக்க விழுந்தான் ஞான துரை. உதடு கிழிந்து தொங்கியது, கன்னங்களில் சிராய்ப்பில் ரத்த கோடுகள். கண்களில் நீர். தலையெங்கும் புழுதி. அப்படியே யேசப்பாவை பார்த்த மாதிரி இருந்தது.

              பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். என்றென்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. தயவாயிரும் சுவாமி தயவாயிரும் பொறுத்தருளும் கர்த்தாவே!
உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். என்றென்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. தயவாயிரும் சுவாமி தயவாயிரும்……….

சிலுவைபாதையின் கடைசி ஜெபம் என்னை நினைவுக்கு கொண்டு வந்தது

         அட 14 ஸ்தலங்களும் முடிந்துவிட்டன என முழங்கால் நின்று ஜெபித்து ஆலையம் விட்டு வெளியே வந்தேன்.
அதன் பின் நாங்கள் சிலுவை அறைந்து விளையாடுவதில்லை. ஓணானை கூட விட்டுவிட்டோம். ரத்தம் தோய்ந்த முகத்தை பார்த்த திருப்திதான் என நினைக்கிறேன். Peace is nothing but better understanding of violence. Without understanding violence peace is not peace.

2 comments:

 1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ராம் கேஷவ் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : சின்னப்பயல்

  வலைச்சர தள இணைப்பு : பிரபஞ்சக்குடில்

  ReplyDelete
 2. மிக அருமையான கதை. கதையின் முடிவில் உண்மையிலேயே சிலிர்த்துவிட்டது.

  ReplyDelete