நம்மாலும்
முடியும்
ஒலிம்பிக்கில் பதக்கங்களை
அள்ளிக் குவிக்க!
”ஒரு சில பத்திரிகைகளுகு அனுப்பி வைத்தேன், வழக்கம் போல யாரும் வெளியிடவில்லை, இருந்தாலும் நான் சொல்லவருவது முக்கியமான மேட்டர்ன்னு எனக்கு தோனிகிட்டே இருப்பதால், இதோ என் பக்கத்தில்..”.
ஆனால், இளைஞர்கள் அதிகம்
வசிக்கிற நம் நாடு, ஒலிம்பிக்
போட்டிகளில் ஒன்றிரண்டு பதங்களை மட்டுமே பெற முடிகிறது என்பதை நினைத்துப்
பார்க்கையில் வருத்தப்படுவதா, கவலைப்படுவதா?
ஏன், கடந்த காலங்களில்
நடைபெற்ற சில ஒலிம்பிக் போட்டிகளில் எந்தவொரு பதக்கத்தையும் பெற முடியாமல்,
வெறும் கையோடு திரும்பிய
வரலாறும் உண்டு.
வெள்ளித் திரை நடிகர்களைப் பற்றியும், நடிகைகளைப் பற்றியும்
பத்தி பத்தியாக எழுதுகிறவர்கள், ஒலிம்பிக்கில்
நம் நாடு ஏன் பின்னடைவைச் சந்திக்கிறது என்பது குறித்து எழுதுவதில்லை. அப்படி எழுதினாலும்,
ஆடிக்கொரு கட்டுரையும்,
அமாவாசைக்கு ஒரு
செய்தியாகவும் வெளியிட்டு, அமைதி காத்து
விடுகிறார்கள்.
அவமானங்களை
சகித்தும் மறந்தும் வாழக்கூடிய கலையில் தீவிர பயிற்சி பெற்றவர்கள் போல, நாமும் இதையெல்லாம்
கண்டும் காணாதது போல் நடந்து கொள்கிறோம்.
“வளர்ந்த பணக்கார நாடுகளால்தான் ஒலிம்பிக் போட்டிகளில்
வெற்றிகளைக் குவிக்க முடியும்” என நம்முடைய
அக்கறையின்மைக்கு சப்பைத்தனமான காரணங்களைச் சொல்பவர்களால், நம்மை விட பொருளாதரத்தில் பின் தங்கிய பல ஏழை
நாடுகளும் பதக்கங்களைப் பெற்று வெற்றிகளைக் குவிப்பதைப் பார்க்கும்போது, மனது முழுக்க பொறாமையும்,
எரிச்சலும், வேதனையும் எழுவதைத்
தடுக்க முடியவில்லை.
உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு! உலக மக்கள் தொகையில்
முதலாவது இடத்தைப் பிடிக்கப் போகும் நாடு! ஆனால், உலகமே வியந்து
கொண்டாடுகிற ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவில் பதக்கங்களை அள்ளிக் குவிக்க
முடியவில்லையே ஏன்? இந்தக்
கேள்விக்கு விடைசொல்ல சில கேள்விகளை முன் வைக்க வேண்டியிருக்கிறது.
விளையாட்டில்
சாதிக்க என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? அரசியல், ஊழல், லஞ்சம் போன்ற பொதுவான காரணங்களைத் தாண்டி, விளையாட்டுத் துறையில்
சாதிப்பதற்குத் தடையாக, வேறு என்னென்ன
குறைபாடுகள் இருக்கின்றன?
நமது இந்திய அரசாங்கம் கடந்த 20 ஆண்டுகளாக விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும்,
விளையாட்டு வீரர்களை
உற்சாகப்படுத்தவும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டங்கள் மிக
நேர்த்தியாக இல்லாவிட்டாலும், தேவையான அளவு
உத்வேகத்தோடு இருப்பதை மறுப்பதற்கில்லை. அதுபோல், விளையாட்டுக்கான
பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் இயங்கி
வருவதையும் மறுக்க முடியாது. மேலும், பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் விளையாட்டு போட்டிகளுக்கான உபகரணங்கள், தேவைகளை அரசாங்கம் செய்து வருவதையும் மறுக்க
முடியாது.
அரசாங்கம் செய்து வருகிற இத்தகைய முயற்சியால், நம்முடைய வீரர்கள் கடந்த
பத்து ஆண்டுகளில், முன்பைக்
காட்டிலும் ஆரோக்கியத்தோடும், உடை
உபகரணங்களோடும் விளையாடுவதையும் மறுக்க முடியாது. மேலும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசு வேலை வாய்ப்புகளையும்
கொடுத்து வருகிறது.
இருந்தும் நம்மவர்களால் ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு
விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை அள்ளிக் குவிக்க முடியவில்லை. பதக்கப் பட்டியலில் முதல்
மூன்று இடங்களுக்குள் இந்தியா வர முடியவில்லை.
எங்கே நடக்கிறது தவறு? என்ன குறைபாடு?
ஒலிம்பிக்கில் அதிகமான பதக்கங்களை ஒரு தேசம்
பெறவேண்டுமானால், நான்கு
முக்கியமான விஷயங்களில் கவனம் மிகத் தேவை. அந்த நான்கு விஷயங்களையும் தன்னுடைய விளையாட்டுத் துறை
கொள்கையாக ஒரு தேசம் கடைபிடிக்கும் எனில், ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களைப் பெறலாம். தற்போதைய சாதனைகளை
முறியடித்து, புதிய உலக
சாதனைகளையும் படைக்கலாம்.
முதலாவது, பெண்கள் அதிக
அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், வீராங்கனைகளின்
எண்ணிக்கைக்கும், ஒரு நாடு வெற்றி
பெறுகிற பதக்கங்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. ஒலிம்பிக்கில் பல
போட்டிகள் பெண்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. அதிகமான பெண் வீரர்களை
களம் இறக்குவதன் மூலமாக இப்படியான ‘பெண்களுக்கு மட்டும்’
விளையாட்டு போட்டிகளில்
வெற்றி பெற வாய்ப்பு ஏராளம் உண்டு. பெரும்பாலான
நாடுகளில் இன்னும் பெண் வீரர்கள் எண்ணிக்கை குறைவுதான். இதனால்தான், சீனாவால் ஒலிம்பிக்கில்
பதக்கங்களை அள்ளிக் குவிக்க முடிகிறது. ஏனென்றால், சீனாவின்
ஒலிம்பிக் அணியில் 50% பெண்கள் என்பது
குறிப்பிடத் தக்கது.
இரண்டாவது, முறைப்படுத்தப்பட்ட
கொள்கை பூர்வமான விளையாட்டு துறை மற்றும் அதன் செயல்பாடுகள். ஊழல், அரசியல் தலையீடு இல்லாத,
அறிவியல் பூர்வமாக
இயங்கும் விளையாட்டு துறையை உருவாக்கிவிட்டால், திறமையான வீரர்களை இளம் வயதிலேயே அடையாளம்
கண்டு, அவர்களை
குறிப்பிட்ட விளையாட்டில் மட்டும் கவனம் கொள்ளச் செய்து, மிகச் சிறந்த வீரராக, வீராங்கனையாக மாற்றிவிட முடியும்.
மூன்றாவது, பல
விளையாட்டுகளில் கவனம் செலுத்தி, நேரம், பணம், பொருள் என விரயம்
செய்வதைக் காட்டிலும், நம்முடையவர்களின்
உடல் வாகுக்கும், அறிவுத்
திறனுக்கும், பொருளாதார
பலத்துக்கும் ஏற்ற விளையாட்டை மட்டும் தேர்ந்தெடுத்து, முழுக் கவனத்தையும் அந்த விளையாட்டிலேயே
செலுத்தி, திறமையை
மேம்படுத்தி வெற்றி பெறுவது. எத்தியோப்பியர்கள்
எல்லா விளையாட்டுகளிலும் கவனம் செலுத்துவதில்லை. ஓட்டப் பந்தயங்களில்
மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதையே தங்கள் நாடு முழுவதும் முதன்மைப் படுத்துகிறார்கள். எனவேதான், பொருளாதாரத் தேவை
அதிகமுடைய அம்பு எய்தல் போன்ற போட்டிகளில் எத்தியோப்பியர்களை பார்க்க முடியாது.
நான்காவதாக, புதிதாக
சேர்க்கப்படும் விளையாட்டுகளை கவனத்தில் கொண்டு, அதில் பயிற்சி எடுத்து வெற்றி பெறுவது. ஏனென்றால், இது போன்ற
விளையாட்டுகளில் அதிகமான போட்டியாளர்கள்
இருக்கமாட்டார்கள்.
இப்படியாக மிக நேர்த்தியான திட்டமிடல், சரியான திறமையைக்
கண்டுணர்ந்து, அதற்கேற்ற
விளையாட்டைத் தேர்வு செய்வது முக்கியம் என்றாலும், அதை விட முக்கியமாக இன்னொரு விஷயத்தை முன்னிருத்த வேண்டும். அதாவது, விளையாடுதல் மூலம்
சம்பாதிக்கவும் முடியும் என்கிற நம்பிக்கையை விளையாட்டு வீரர்களுக்கு உருவாக்கிக்
கொடுக்க வேண்டும்.
சினிமா எப்படி கேளிக்கை தொழிலோ அதுபோல், விளையாட்டும்
அடிப்படையில் ஒரு கேளிக்கைதான்.
தன் வாழ்நாளுக்குத் தேவையான பொருளாதாரத் தேவையைப் பெற,
விளையாட்டை ஒருவன்
ஆதாரமாகக் கொண்டு செயல்படத் தொடங்கினால், அந்த விளையாட்டின் மூலமாக தன் வாழ்க்கையை ஓரளவுக்கு வளமாக
வாழ்ந்து விட முடியும் என்கிற சூழல் விளையாட்டுத் துறையில் உருவாக வேண்டும்.
ஒருவருக்கு குறிப்பிட்ட விளையாட்டில் நல்ல திறமை இருக்கிறது. அந்த விளையாட்டை தன் உடல்
ஆரோக்கியம் உள்ள மட்டும் விளையாட ஆர்வமும் இருக்கிறது. ஆனாலும், அந்த விளையாட்டை வைத்து
மட்டுமே அவரால் வாழ்ந்து விட முடியாது என்கிற சூழல்தான் இப்போது நம் நாட்டில்
நிலவுகிறது. எனவே, விளையாட்டை
கேளிக்கையாகவும், தொழிலாகவும்
மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நம் நாடும், நாமும் இருக்கிறோம்.
அடிப்படையில் விளையாட்டை தொழிலாக தேர்வு செய்வது என்பது
ரிஸ்க்கான விஷயம். குறிப்பாக, ஒரு சிறிய காயம் ஒருவனின்
விளையாட்டு வாழ்க்கையை /கனவை ஒரேடியாக
முடித்து விடக்கூடிய அபாயம் உண்டு. மேலும், ஒரு குறிப்பிட்ட வயது
வரைதான் முழுத்திறனோடும், தெம்போடும்
விளையாட முடியும். விளையாட்டுத்
துறையில் ஓய்வு என்பது நாற்பது வயது. மற்ற தொழிலைக்
காட்டிலும் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பே இந்த ஓய்வு நாள் வந்துவிடும். அதன் பின்னர் பழைய
முனைப்போடு விளையாட முடியாது. எனவே, ஓய்வுக்கு பின்னரும்
ஒரு விளையாட்டு வீரர், தான் சார்ந்த
விளையாட்டின் மற்ற தொழிலான நடுவர், பயிற்சியாளர் போன்ற வேலைகளை அரசாங்கம் அதிகளவில் உருவாக்க
வேண்டும். இப்படியெல்லாம்
நடந்தால், விளையாட்டும் ஒரு
தொழிலாக மாறி, பல்லாயிரம் புதிய
வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பல லட்சம் புதிய
வீரர்களை இந் நாட்டுக்கு கொடுக்கும்.
விளையாட்டை தொழில் சார்ந்த கேளிக்கையாக, கலையாக எடுத்துக் கொண்ட
நாடுகள்தான் இன்று ஒலிம்பிக்கில் பதக்கங்களை வாங்கிக் குவிக்கின்றன. ஆனால், இந்தியாவில் விளையாட்டு
என்பது இன்னமும் highly risky career ஆகவே உள்ளது.
இந்தியாவில் விளையாட்டு தொழில் முறையாக உருவாகவில்லை
என்பதால், தனக்குப் பிடித்த
விளையாட்டை தன்னுடைய வாழ்நாள் துறையாக ஏற்றுக்கொள்ள இன்றைய இளைஞர்கள்
அஞ்சுகிறார்கள். இங்கே ஒரு
விளையாட்டு வீரன், அவனுடைய சொந்த
செலவில் பயிற்சி செய்து, தேசிய அளவில்
வெற்றி பெற்று, பதக்கம் பெற்ற
பிறகே, அரசாங்கத்தின்
கவனத்திற்கு அவனுடைய தேவைகள் தெரிய வருகின்றன. அதன் பிறகு வேலை வாய்ப்பு
வருகிறது. வராமலும் போகலாம். தெற்காசிய போட்டி,
ஆசிய போட்டி, காமன் வெல்த் போட்டி,
ஒலிம்பிக் போட்டி போன்ற
போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே விருதுகளும், பரிசுகளும், ஒரு சொந்த வீடும் வழங்கப்படுகிறது. அது வரை அந்த விளையாட்டு
வீரரின் பொருளாதாரத் தேவைகளை அவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் கடந்து, விளையாட்டு விளையாடி மட்டுமே ஒரு வீரரால்
சிறப்பாக வாழமுடியும் என்பதற்கான வழிமுறைகளை நம் நாட்டில் ஏற்படுத்த வேண்டியது இப்போதைய கட்டாயம்.
இதற்கு விளையாட்டை முறையான வணிக மயாமாக்கல் செய்ய வேண்டும். விளையாட்டிற்கும்
மக்களுக்கும் இருக்கும் தூரத்தைக் குறைத்து, திரைப்படங்களை மக்கள் விரும்பிப் பார்ப்பதுபோல்,
விளையாட்டுகளையும் மக்கள்
விரும்பிப் பார்க்கும் வகையில், மக்களை
பார்வையாளர்களாக உருவாக்க வேண்டும். விளையாட்டுப்
போட்டிகள் நடக்கும் அரங்குகள் நிறைந்து வழிய வேண்டும். சினிமா என்பது கேளிக்கை. விளையாட்டு என்பது
அற்புதமான கேளிக்கை என்கிற மனநிலையை மக்களிடத்தில் உருவாக்க வேண்டும்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போல, மாநில அளவிலான, மாவட்ட அளவிலான லீக்
கிரிக்கெட் போட்டிகள் எப்படி மாநில அளவிலான, மாவட்ட அளவிலான கிரிக்கெட் வீரர்களின்
வாழ்வாதாரத்தை மாற்றி அமைத்ததோ அது போல, அனைத்து விளையாட்டுகளிலும் இந்த நடைமுறை வரவேண்டும்.
உள்ளூர் தொடங்கி வட்டம், மாவட்டம், மாநில அளவில் ஒவ்வொரு விளையாட்டையும் பிரதானமாக
முன்னிலைப் படுத்த, இந்த லீக்
போட்டிகள் அவசியம். இதன் மூலமாக
எல்லா விளையாட்டுகளையும் வணிகமாக்கி சம்பாதிக்க முடியும். இந்த லீக் போட்டிகள்
வாரம் ஒன்றோ அல்லது இரண்டோ தொடர்ந்து நடைபெறும்போது, உள்ளூர் பிரபல ஆட்டக்காரர்கள் இதன் மூலம்
வருடம் முழுவதும் விளையாடவும், அதன் முலம்
சம்பாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
இன்று, விளையாட்டு அகாடமிகள் பல்வேறு நகரங்களில்
துக்கப்பட்டு வந்தாலும், அவை அந்த நகரம் என்கிற எல்லையை தாண்டிச் செல்வதில்லை. ஆனால் கேஎப்ஸி, பர்கர், தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வு மையங்கள்
போன்றவை எல்லா எல்லைகளையும் கடந்து அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது. காரனம், வணிகமயமாக்கல். மிக நேர்த்தியாக மாநிலத்தின்
ஒவ்வொரு மாவட்டத்திலும் சில கிளைகளைத்
திறந்து, வணிக முறையில் செய்யப்படும் வியாபாரங்கள்
இவை. விளையாட்டையும், விளையாட்டு ஆணையங்களையும் இந்த முறையில் வணிகமயமாக்குதல்
அவசியம்.
நம் நாட்டில் சினிமாவுக்குப் பிறகு, கிரிக்கெட் விளையாட்டை மட்டுமே கேளிக்கை வணிகமாக்கி
வைத்திருக்கிறோம். கிரிக்கெட்டைப்
போன்று இன்னும் பல விளையாட்டுகளை வணிகமயமாக்கினால், மக்களுக்கு
உடல் ஆரோக்கியத்தின் அத்தியாவசியத்தை உணர்த்துவதோடு, விளையாட்டையும் தரமான கேளிக்கையாக்கி, அதன் மூலம்
வீரர்களுக்கும் நிரந்தர வருமானம் கிடைக்க வழி ஏற்படும்.
சினிமா மற்றும் குடி போன்றவை இன்று பெரும் கலாசாரமாகவும்,
நம் வாழ்வின் அங்கமாகவும்
மாறிவிட்டதற்கு, அவற்றை
வணிகமாக்கியதே காரணம்.
ஒரு விஷயம் பெரும் வணிகமாகி, பணம் புழங்கும் இடமாக மாறி விட்டால், பின்னாளில் அதை எளிதில்
அகற்றிவிட முடியாது. அதனால்தான்,
சினிமாவும், மதுவும் நம் வாழ்வில்
இரண்டறக் கலந்துவிட்டன. இதுபோல்
விளையாட்டையும் கேளிக்கையாக்கி, வணிகமயமாக்கிவிட்டால்,
ஒவ்வொரு ஊரிலும் சில பல
விளையாட்டு வீரர்கள் புதிதாக உருவாகிக்கொண்டே இருப்பார்கள். பின்னாளில், ஒலிம்பிக்கையும் இவர்களே
ஒருகை பார்ப்பார்கள்.
இதையெல்லாம் செய்யாமல், பதக்கங்களை அள்ளி விடத் துடிக்கிறோம். சாம்பியன்களை
உருவாக்கிவிடக் கூடிய எந்த சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியாத நிலையில்கூட,
ஒரு பதக்கம் வந்துவிடாத
என ஏங்குகிறோம். கனவும், கற்பனையும் விளையாட்டுத்
துறைக்கு உதவாது. செயல்பாடுகளே
உதவும்.
கிரிக்கெட்டை ஊக்கப்படுத்த மட்டுமே நம் நாட்டில் எல்லா முயற்சிகளும்
நடந்து வருகின்றன. அதனால்தான்,
இந்தியாவால் இரண்டு முறை
கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்ற முடிந்தது. ஐ.பி.எல், டி.என்.பி.எல் போன்ற புதிய போட்டிகள் அறிமுகமாகி, கிரிக்கெட் வீரர்களை பல
நிறுவனங்கள் போட்டி போட்டு ஏலம் எடுக்க வைக்கின்றன. இதுபோல் இதர விளையாட்டுகளை
ஊக்கப்படுத்தும் வகையில், அரசாங்கமும்,
மக்களும் செயல்பட்டால்,
அனைத்து
விளையாட்டுகளுக்கும் புதிய விளையாட்டு நிறுவனங்கள் தோன்றும். இதன் மூலம் வீரர்களை பொருளாதார பயம் துரத்தாமல், விளையாட்டும் நிரந்தர
வருவாய்க்கான ஒரு தொழிலாக மாறுமாயின் ஒலிம்பிக் மெடல் கனவுகள் நனவாவதில்
சிரமமிருக்காது.
கிரிக்கெட் விளையாட்டு வணிகமயமாக்கப்பட்டதாலேயே, ஐ,பி,எல் எனும் புதிய போட்டிகள் உருவாக்கப்பட்டன. இந்த ஐ.பி.எல் போட்டிகளுக்கு மக்களிடையே கிடைத்த மாபெரும்
வரவேற்பு, இன்று தமிழ்நாடு
பிரிமியர் லீக் எனும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கு வழிவகை செய்து
கொடுத்திருக்கிறது. இந்த டி.என்.பி.எல் போட்டியால் கிராமத்து இளைஞர்களும் தேசிய அளவில் தங்கள்
திறமைகளை நிரூபித்து, நாட்டுக்காக
விளையாடும் வாய்ப்புகளை பெறவிருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டு நம் நாட்டில் வணிகமயமாக்கப்பட்டதாலேயே,
மாவட்ட அளவிலான டி.என்.பி.எல் போட்டிகளைக்கூட சர்வதேச தரத்துக்கு இணையாக ஸ்டார் டிவி
நேரடி ஒளிபரப்பு செய்கிறது. சொல்ல முடியாது, ஒரு வேளை நம்மூர் இளைஞர்களின் ஆட்டத்தைப்
பார்த்து, அண்டை நாடானா இலங்கை, வங்க தேசத்தில் நடக்கும் இப்படியான லீக் போட்டிகளில் ஆட கூட
வாய்ப்புகளும்
வரும். இதுவே, உலகெங்கும் விளையாடும் விளையாட்டு என்றால் இன்னும் வாய்ப்புகள்
அதிகரிக்கும்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பல்வேறு விளையாட்டுகள் இப்படி வனிகமயமாக்கம் அடைந்து
விட்டது. இப்படி வணிகமயமாக்க்க் கூடிய சூழல்,
அதற்கு தேவையான சட்டமுறைகள், ஒழுங்குகளை அரசாங்கம் முன்னெடுத்தால், விளையாட்டையும் தொழிலாக ஆக்க பல நிறுவனத்தார் முன் வருவார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விளையாட்டு
தானாகவே முன்னுரிமை பெரும். விளையாட்டு மைதானங்களின் தரம், பயிற்சியின் தரம், விளையாட்டு வீரர்களின் பலம், திறமை என பல்வேறு காரணிகள் தானாக வலுப்பெரும். இதன் விழைவு ஒலிம்பிக் பதக்கமாக மாறும். இந்தியர்களின்
ஒலிம்பிக் மெடல் கனவு, எதிர்வரும் ஒலிம்பிக்
போட்டிகளில் நனவாகும்.
No comments:
Post a Comment